வட மாநிலங்களில் மின்னல் தாக்கி 12 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 68 பேர் பலி


வட மாநிலங்களில் மின்னல் தாக்கி 12 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 68 பேர் பலி
x
தினத்தந்தி 12 July 2021 10:42 AM IST (Updated: 12 July 2021 4:52 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தனித்தனியாக மின்னல் தாக்கியதில் மொத்தம் 68 பேர் உயிரிழந்து உள்ளனர்.

புதுடெல்லி

வட இந்தியாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  ராஜஸ்தான், மத்திய பிரதேசம்  மற்றும் உத்தர பிரதேசத்தில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.

உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்  தனித்தனியாக  மின்னல் தாக்கியதில் மொத்தம் 68 பேர் உயிரிழந்து உள்ளனர்.

உத்தரபிரதேசத்தில் மின்னல் தாக்கியதன் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை இன்று  41 ஆக உயர்ந்துள்ளது. உத்தர பிரதேசத்தின் பிரயாகராஜின் சில பகுதிகளிலும் 14 பேர் தனித்தனியான மின்னல் தாக்குதல் சம்பவங்களில்  உயிரிழந்து உள்ளனர்.கான்பூர் தேஹத் மற்றும் பதேபூரில் தலா ஐந்து பேரும், கவுசாம்பியில் நான்கு பேரும், பிரோசாபாத்தில் மூன்று பேரும், உன்னாவ், ஹமீர்பூர் மற்றும் சோன்பத்ராவில் தலா ஒருவரும்  இறந்துள்ளனர். கான்பூர் நகரில் தலா இரண்டு பேர் இறந்தனர், பிரதாப்கர் ஹர்தோய் மற்றும் மிர்சாபூரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் ஏழு பேர் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில், ஏழு பேர் கோட்டா மற்றும் தோல்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த குழந்தைகள். 11 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள்.மேலும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலா ஒருவர் ஜலாவர் மற்றும் பரானைச் சேர்ந்தவர்.

ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மின்னல் தாக்கியதால் 20 பேர் உயிரிழந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்  தெரிவித்துள்ளார். 

Next Story