கொரோனா 3-வது அலை: இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை


கொரோனா 3-வது  அலை:  இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 July 2021 9:17 PM IST (Updated: 12 July 2021 9:17 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா 3-வது அலை தவிர்க்க முடியாதது என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கோர தாண்டவம் ஆடிய கொரோனா வைரசின் 2-வது அலை பரவல் தற்போது கணிசமாக குறைந்துள்ளது. மே மாதத்தில் நாளொன்றுக்கு 4 லட்சம் வரை தொற்று பாதிப்பு பதிவாகி அதிர வைத்த நிலையில், தற்போது கொரோனா தொற்று ஏறத்தாழ 40 ஆயிரம் என்ற அளவில் கடந்த சில நாட்களாக நீடித்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. 

இதனால், மக்கள் சுற்றுலாத்தளங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். சந்தைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. பல இடங்களில் கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் காற்றில் பறக்க விடுவதை காண முடிகிறது.  இந்த நிலையில், கொரோனா வைரசின் 3-வது அலை விரைவாக தொடங்கும் என்று இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்திய மருத்துவ சங்கம்  இதுதொடர்பாக கூறியிருப்பதாவது:

'வழிப்பாட்டு தளங்கள், சுற்றுலாத் தளங்கள் திறக்கப்பட்டிருப்பதால் கொரோனாவின் மூன்றாம் அலை மிகவும் வேகமாக ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதுவரை சர்வதேச அளவில் தொற்று குறித்து நமக்கு கிடைக்கும் சான்றுகளை வைத்து பார்த்தால், மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. 

 கூட்டமாக மக்கள் கூடும் சந்தர்ப்பங்கள்தான் கொரோனா 3 ஆம் அலையின் ஆரம்பப் புள்ளி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு விதிகளை கைவிட்டுவிடக்கூடாது  என்றும் மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 

Next Story