கே.ஆர்.எஸ். அணை பகுதியில் வெடிபொருட்களின் பயன்பாடு குறித்து சோதனை நடத்த முடிவு: கனிம வளத்துறை மந்திரி


கே.ஆர்.எஸ். அணை பகுதியில் வெடிபொருட்களின் பயன்பாடு குறித்து சோதனை நடத்த முடிவு: கனிம வளத்துறை மந்திரி
x
தினத்தந்தி 13 July 2021 5:52 AM IST (Updated: 13 July 2021 5:52 AM IST)
t-max-icont-min-icon

மண்டியாவில் உள்ள கே.ஆர்.எஸ். அணை பகுதியில் வெடிபொருட்களின் பயன்பாடு குறித்து சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக கனிம வளத்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறினார்.

கனிம வளத்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கல்குவாரி தொழில்
மண்டியா மாவட்டத்தில் சட்டவிரோதமாக கல் குவாரி தொழில்கள் நடைபெற்று வருவதாக சுமலதா எம்.பி. புகார் கடிதம் வழங்கியுள்ளார். நான் அந்த மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன். இதில் சட்டவிரோதமாக கல்குவாரி தொழில்கள் நடைபெறுவது உறுதியானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த 3 மாதங்களாக கே.ஆர்.எஸ். அணையின் 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கல் குவாரி தொழில் செய்ய அனுமதி வழங்கவில்லை. சட்டவிரோதமாக கல் குவாரி தொழில் செய்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பேபி மலையில் சட்டவிரோதமாக கல் குவாரி தொழில் நடைபெறுவதாக சுமலதா எம்.பி. புகார் கூறியுள்ளார். அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

வெடி பொருட்கள்
மண்டியா மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களாக கல் குவாரி தொழில் நடக்கவில்லை என்று கூறி அதிகாரிகள் ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்தனர். மண்டியாவில் மொத்தம் 38 கல் குவாரிகள் நிறுவனங்களை மூடியுள்ளோம். புனேவில் உள்ள மத்திய நீர் மற்றும் மின்சார சோதனை நிறுவனம் மூலம் கே.ஆர்.எஸ். சுற்று பகுதியில் எந்த அளவுக்கு வெடி பொருட்களை வெடிக்கலாம் என்பது குறித்து சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த சோதனை மூலம் வெடிபொருட்களின் பயன்பாடு குறித்து தகவல் கிடைக்கும். நாங்கள் எக்காரணம் கொண்டும் சட்டவிரோத கல் குவாரி தொழிலை ஆதரிக்க மாட்டோம்.

இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.

Next Story