ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கொலை வழக்கு: மத்தியபிரதேசத்தில் மேலும் ஒருவர் கைது

முன்னாள் மத்திய மந்திரி ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கொலை தொடர்பாக மேலும் ஒருவரை மத்தியபிரதேச போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.33 லட்சம் மதிப்புள்ள கொள்ளை பொருட்கள் மீட்கப்பட்டன.
கிட்டி குமாரமங்கலம்
தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய மந்திரி ரங்கராஜன் குமாரமங்கலம். இவரது மனைவியான கிட்டி குமாரமங்கலம் (வயது 68), சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்தார்.டெல்லி வசந்த் விகாரில் உள்ள பங்களாவில் தனியாக வசித்து வந்த இவரை, வீட்டில் சலவைத் தொழிலாளியாக பணிபுரிந்து வந்த ராஜீவ் உள்ளிட்ட 3 பேர் கடந்த 6-ந் தேதி தலையணையால் அமுக்கி கொலை செய்தனர். பின்னர் வீட்டிலிருந்து நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
மற்றொருவர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக சலவைத் தொழிலாளி ராஜீவையும், மற்றொருவரையும் டெல்லி போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய, தலைமறைவாக இருந்த சூரஜ்குமார் (36) என்ற மற்றொரு நபரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில் மத்தியபிரதேச மாநிலம் பல்தேவ்புரா கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் மறைந்திருந்த சூரஜ்குமாரை மத்தியபிரதேச போலீசார் நேற்று கைது செய்தனர்.
ரூ.33 லட்சம் பொருட்கள்
அவரிடம் இருந்து 522 கிராம் தங்க நகைகள், 300 கிராம் வெள்ளி நகைகள், வைர நகைகள் உள்ளிட்ட மற்றவை என மொத்தம் ரூ.33 லட்சம் மதிப்புள்ள கொள்ளை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட சூரஜ்குமாரை டெல்லி போலீசாரிடம் மத்தியபிரதேச போலீசார் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story