நாட்டின் சில பகுதிகளில் கொரோனா கால விதிமுறைகளை மக்கள் மதிப்பதில்லை மத்திய அரசு வருத்தம்


நாட்டின் சில பகுதிகளில் கொரோனா கால விதிமுறைகளை மக்கள் மதிப்பதில்லை மத்திய அரசு வருத்தம்
x
தினத்தந்தி 14 July 2021 9:44 AM IST (Updated: 14 July 2021 9:44 AM IST)
t-max-icont-min-icon

நாட்டின் சில பகுதிகளில் கொரோனா கால நடத்தை விதிமுறைகளை மக்கள் மதிக்காமல் மொத்தமாக மீறுவதை பார்க்க முடிந்ததாக மத்திய அரசு வருத்தம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையை வேரடி மண்ணோடு வீழ்த்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் முழுமூச்சுடன் போராடி வருகின்றன.

அதே நேரத்தில் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. இதன் காரணமாக கொரோனா முடிவுக்கு வந்தவிட்டதாக நாட்டின் சில பகுதிகளில் மக்கள் தவறாக கருதி, விதிமுறைகளை மதிப்பதில்லை. முககவசம் அணிவதில்லை. தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதில்லை. கூட்டம் கூடுகின்றனர்.

இந்த நிலையில் மத்திய அரசின் சார்பில் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால், டெல்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உலகளவில் மூன்றாவது அலை காணப்படுகிறது. இது இந்தியாவில் தாக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு நாம் கைகோர்ப்போம்.

மூன்றாவது அலையைப் பற்றி நாம் வானிலை நிலவரம் போல சாதாரணமாக பேசுகிறோம். இது பருவ மழை காலத்துக்கு முன்பாக நாம் எங்காவது செல்லவேண்டும் என்பதைப்போன்ற ஒரு திட்டத்தைப்போல அல்ல. இது வைரசுக்கும், மனிதனுக்கும் இடையேயான தொடர்ச்சியான போர்.

சுற்றுச்சூழலை விட நமது நடத்தைதான் மூன்றாவது அலையை ஏற்படுத்தக்கூடும்.

நாம் புரிந்துகொள்ளத்தவறிய விஷயம் ஒன்று உண்டு. அது, கொரோனா கால பொருத்தமான நடத்தைகளை கடைப்பிடிப்பது எதிர்கால அலைகளைத்தடுக்கும் அல்லது பொருத்தமான நடத்தைகளை பின்பற்றாமல் இருப்பது எதிர்கால அலைகளை ஏற்படுத்தும் என்பதுதான். இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச்செயலாளர் லாவ் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் சதார் பஜார், ஜன்பத் சந்தை, சென்னை தியாகராயநகரில் ரங்கநாதன் தெரு போன்ற சந்தைப் பகுதிகளிலும், தமிழ்நாட்டின் விளாரிபட்டி (சிவகங்கை மாவட்டம்), சண்டிகாரில் சுக்னா ஏரி, மராட்டியத்தில் பூஷி அணை போன்ற இடங்களிலும் கொரோனா கால நடத்தை விதிகள் மொத்தமாய் மீறப்பட்டதை பார்க்க முடிந்தது. இது, இதுவரையில் கொரோனா தொற்றை நிர்வகித்து அடைந்த பலன்களை ஒன்றுமில்லாமல் செய்து விடும்.

புதிய பாதிப்புகளும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் குறைந்து வந்தாலும், தொற்றின் பிடியில் இருந்து மீள்வோர் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதில் நாம் மனநிறைவு அடைந்து விட முடியாது.

இங்கிலாந்து, ரஷியா, வங்காளதேசம், இந்தோனேசியா என உலகளவில் தொற்று பாதிப்பு இன்னும் கவலைக்குரியதாகவே அமைந்துள்ளது.

இந்தியாவிலும் மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அருணாசலபிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது.

இந்த மாதத்தில் இதுவரையில் புதிதாக பாதிப்புக்குள்ளானோரில் 73.4 சதவீதத்தினர் கேரளா, மராட்டியம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவற்றில் கேரளாவில் பாதிப்பு 30.3 சதவீதமாகவும், மராட்டியத்தில் 20.8 சதவீதமாகவும், தமிழ்நாட்டில் 8.5 சதவீதமாகவும், ஆந்திராவில் 7.3 சதவீதமாகவும், ஒடிசாவில் 6.5 சதவீதமாகவும் பங்களிப்பு இருந்துள்ளது.

கடந்த சில நாட்களில் 11 மாநிலங்களில் தொற்றை நிர்வகிக்க மாநில அரசுகளுக்கு உதவுவதற்கு மத்திய குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வட கிழக்கு மாநிலங்கள் தவிர்த்து, மராட்டியம், சத்தீஷ்கார்,கேரளா, ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. அங்கு தொற்று பரவல் அதிகரிப்பை அல்லது அதிகளவு பாதிப்பு விகிதத்தை பார்க்க முடிகிறது.

தொடர்ச்சியான அடிப்படையில், கவலைக்குரிய மாநிலங்களில் நாங்கள் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கொரோனாவை அங்கெல்லாம் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து விவாதம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story