தடுப்பூசி பற்றாக்குறை என பீதியை உருவாக்குகிறார்கள் - மத்திய அரசு குற்றச்சாட்டு


தடுப்பூசி பற்றாக்குறை என பீதியை உருவாக்குகிறார்கள் - மத்திய அரசு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 15 July 2021 6:39 AM IST (Updated: 15 July 2021 6:39 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதாக ஊடகங்களில் அறிக்கைகளை வெளியிட்டு, மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குகிறார்கள் என்று மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசி உருவாகி உள்ளது. இதை மக்கள் புரிந்து கொண்டதால், தயக்கத்தைக் கைவிட்டு, தடுப்பூசி போட்டுக்கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் பல மாநிலங்களிலும் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வந்தன.

ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மராட்டியம் போன்ற அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலங்கள், தங்களுக்கு அதிகளவிலான தடுப்பூசிகள் தேவை என கோரிக்கை எழுப்பி உள்ளன.

மராட்டிய சுகாதார மந்திரி ராஜேஷ் தோபே, தங்கள் மாநிலத்துக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தது 3 கோடி தடுப்பூசிகள் வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

ராஜஸ்தானில் கடந்த திங்கட்கிழமையன்று தடுப்பூசி தட்டுப்பாட்டினால் மொத்தம் உள்ள 33 மாவட்டங்களில் 25 மாவட்டங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற வில்லை என அந்த மாநில அரசு அதிகாரி தகவல் வெளியிட்டார்.

மேற்கு வங்காள மாநில சுகாதாரத்துறை மூத்த அதிகாரி, தங்களது மாநிலத்தில் 23 மாவட்டங்கள் இடையே தடுப்பூசியை சமமாக வினியோகிக்க கடினமாக உள்ளதாக தெரிவித்தார்.

இதையொட்டி மத்திய அரசு சார்பில், சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா டுவிட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தடுப்பூசிகள் கிடைப்பது குறித்து, பல்வேறு மாநில அரசுகள் மற்றும் தலைவர்களின் அறிக்கைகள், கடிதங்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.

அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள் மூலம் தடுப்பூசி போடுவதற்கு கடந்த மாதம் 11.46 கோடி டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கிடைக்கச்செய்தோம். இந்த மாதம், இந்த தடுப்பூசிகளின் டோஸ் 13.50 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 19-ந் தேதியே முதல் மற்றும் இரண்டாவது 15 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் கிடைக்கும் தடுப்பூசி அளவு குறித்து மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

எனவே எப்போது, எவ்வளவு தடுப்பூசிகள் கிடைக்கும் என்பது மாநிலங்களுக்கு நன்றாகவே தெரியும்.

இதை மத்திய அரசு செய்ததற்கு காரணம், மாநிலங்கள் தடுப்பூசி போடுகிற பணியை மாவட்டங்கள் அளவில் சரியாக திட்டமிட்டு, மக்கள் எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதுதான்.

இப்படி மத்திய அரசு முன்கூட்டியே தகவல் அளித்து வந்தும் கூட, இன்னும் தவறான நிர்வாகத்தையும், தடுப்பூசி போட்டுக்கொள்வோர் நீண்ட வரிசைகளில் நிற்பதையும் நாங்கள் பார்க்க முடிகிறது. எனவே பிரச்சினை என்ன என்பதும், அதற்கு யார் காரணம் என்பதும் தெளிவாகத்தெரிகிறது.

ஆனால் ஊடகங்கள் வழியாக அறிக்கைகளை வெளியிட்டு குழப்புகிறார்கள். கவலைப்பட வைக்கிறார்கள். இப்படி செய்கிறவர்கள், தடுப்பூசி போடுகிற செயல்முறை மற்றும் அதனுடன் தொடர்புடைய தகவல்கள் மறைக்கப்பட்டுள்ளனவா என்பதை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். தடுப்பூசி வினியோகம் தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்ட தகவல்களைக்கூட அவர்கள் அறிந்து கொள்ளவில்லை.

எனவே ஊடகங்களில் பயனற்ற அறிக்கைகளை வெளியிடுவதின் நோக்கம், மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதுதான்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story