பிப்ரவரி மாதம் படைகளை விலக்கியபின் லடாக் எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறவில்லை - ராணுவம் உறுதி


பிப்ரவரி மாதம் படைகளை விலக்கியபின் லடாக் எல்லையில் சீனா மீண்டும் அத்துமீறவில்லை - ராணுவம் உறுதி
x
தினத்தந்தி 15 July 2021 1:51 AM GMT (Updated: 15 July 2021 1:51 AM GMT)

லடாக் எல்லையில் கடந்த பிப்ரவரி மாதம் படைகளை திரும்ப பெற்றபின் அங்கு சீனா மீண்டும் அத்துமீறவில்லை என ராணுவம் உறுதிபட தெரிவித்து இருக்கிறது.

புதுடெல்லி,

கிழக்கு லடாக்கில் கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சி காரணமாக பல பகுதிகளில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இரு தரப்பிலும் உயிரிழப்பும் நிகழ்ந்தன.

இதைத்தொடர்ந்து இரு நாட்டு எல்லைப்பகுதியில் இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் நிறைந்த பிராந்தியமாக லடாக் மாறியது. அங்கு பதற்றத்தை தணித்து அமைதியை ஏற்படுத்த இருதரப்பும் தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்தின.

இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே 11 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதன் பலனாக பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பும் படைகளை திரும்பப்பெற்றன.

இன்னும் பல சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருதரப்பு ராணுவமும் தீவிர கண்காணிப்பில்தான் உள்ளன. இது பதற்றத்தை நீடிக்க செய்வதால், அந்த பகுதிகளிலும் படைகளை விலக்க சீனாவை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் சீனா நெகிழ்வுத்தன்மையை கடைப்பிடிக்காததால், இந்த படை வாபஸ் நடவடிக்கை அப்படியே முடங்கிப்போய் உள்ளது.

இந்த நிலையில் கிழக்கு லடாக்கில் சீன ராணுவம் அசல் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியை கடந்து பல இடங்களில் இந்திய பகுதிக்குள் ஊடுருவி இருப்பதாகவும், இதனால் அங்கு குறைந்தபட்சம் ஓரிடத்திலாவது இருதரப்புக்கும் இடையே மோதல் நடந்திருப்பதாகவும் ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி இருந்தது.

ஆனால் இந்த தகவல்களை இந்திய ராணுவம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

இது குறித்து ராணுவம் கூறுகையில், ‘இந்த ஆண்டு பிப்ரவரியில் இரு நாட்டுக்கும் இடையே படை விலக்கல் ஒப்பந்தம் அமல்படுத்தியதில் இருந்து, எல்லையில் படை விலக்கல் நடைபெறும் பகுதிகளில் இரு தரப்பும் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. இதைப்போல அந்த ஊடக செய்தியில் கூறப்பட்டது போல, கல்வான் பகுதியிலோ வேறு எந்த பகுதியிலுமோ மோதல் ஏதுவும் நடைபெறவில்லை’ என்று தெரிவித்து உள்ளது.

எல்லையில் சீனாவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மீறப்பட்டு இருப்பதாக வெளியான செய்திகள் ஆதாரமற்ற தவறான செய்திகள் எனக்கூறியுள்ள ராணுவம், அங்கு மீதமிருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இரு தரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அங்கு சம்பந்தப்பட்ட பகுதிகளில் இந்திய ராணுவத்தின் ரோந்துப்பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் உறுதிபட தெரிவித்து உள்ளது.

மேலும் எல்லையில் கள நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அங்கு குவிக்கப்பட்டுள்ள சீன வீரர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் செயல்பாடுகளையும் இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

Next Story