சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது தேசதுரோக சட்டம் இப்போதும் தேவையா? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி

தேச துரோக சட்டம் இப்போதும் தேவையா? என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
புதுடெல்லி,
கர்நாடகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.ஜி.ஒம்பத்கரே சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், தேச துரோக சட்டம் 124-ஏ பிரிவு, அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், அதை ரத்துசெய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த மனு, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி, ‘‘இதே விவகாரம் தொடர்பான வழக்கு, நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது, எனவே இரு வழக்குகளையும் இணைத்து விசாரிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.
அதற்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘‘நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக அறிவோம். இரு வழக்குகளையும் இணைத்து விசாரிப்பதா என்பதை ஆராய்வோம்’’ என்றார்.
இதையடுத்து தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலை பார்த்து கூறியதாவது:-
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர் போன்ற விடுதலைப்போராட்ட வீரர்களின் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கத்தில் இந்த தேச துரோக சட்டம் பயன்படுத்தப்பட்டது.
நாடு விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் தேச துரோக சட்டம் தேவையா? தேச துரோக சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் தண்டனை பெறுவோர் விகிதம் மிக குறைவாக உள்ளது.
தேச துரோக சட்டத்தை தவறாக பயன்படுத்துவது, மரத்தை அறுக்க ரம்பத்தை தச்சரிடம் அளித்தால், அவர் ஒட்டுமொத்த காட்டையே அழிப்பது போலுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு ‘செல்லாது’ என அறிவித்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதுபோல், யாருக்கு எதிராக வேண்டுமென்றாலும் தேசத்துரோக சட்டத்தின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்ய முடியும். தேசத்துரோக சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்போது அனைவருக்கும் ஒரு அச்சம் ஏற்படுகிறது. இதுகுறித்தெல்லாம் ஆராய வேண்டியுள்ளது. தேசத்துரோக சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து கவலைப்பட வேண்டியுள்ளது.
தேவையற்ற பல்வேறு சட்டங்களை தற்போது உள்ள அரசு நீக்கியுள்ளது. ஏன் இந்த சட்டம் குறித்து ஆராயவில்லை? ஒரு கட்சி, மற்றொரு கட்சியின் கருத்துகளை ஏற்கவில்லை என்றால் இதுபோன்ற சட்டங்களைப் பயன்படுத்தி வழக்கில் சிக்க வைக்க முடியும்.
மனுதாரர் நாட்டுக்காக தனது வாழ்வைத் தியாகம் செய்துள்ளார். இந்த மனுவை உள்நோக்கம் கொண்டது என புறந்தள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், தேச விரோத சட்டத்தை மொத்தமாக ரத்து செய்யாமல், சட்டத்தை தவறாக பயன்படுத்தாமல் இருக்க சில வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கலாம் என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த மனு தொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, உரிய அமர்வு முன் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story