12 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவை; ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும்

12 கோடி கொரோனா தடுப்பூசிகள் தேவை என்றும், ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய மந்திரிகளிடம் நேரில் வலியுறுத்தினார்.
புதுடெல்லி,
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தின் மருத்துவம் சார்ந்த கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்துவதற்காக நேற்று முன்தினம் டெல்லி சென்றார். நேற்று அவர் மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜக்மோகன்சிங் ராஜு, முதன்மை செயலாளர் செந்தில்குமார், தமிழக அரசு இல்ல உறைவிட ஆணையர் ஆசிஷ் சட்டர்ஜி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
மந்திரிகளுடனான சந்திப்பு குறித்து மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மத்திய கல்வித்துறை மந்திரியை சந்தித்து, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினோம். அதற்கான காரண காரியங்களான, கிராமப்புற மாணவர்களின் பாதிப்பு, கடந்த 4 ஆண்டுகளில் 13 மாணவ-மாணவிகளின் உயிரிழப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகளை எடுத்துச்சொன்னோம். பாடப்பிரிவுகளில் மாநில திட்டம், சி.பி.எஸ்.இ. திட்டங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கூறினோம்.
மேலும் பிரதமரை முதல்-அமைச்சர் நேரில் சந்தித்து அளித்த மனு, அனுப்பி வைத்த கடிதம் போன்ற விவரங்களும் கல்வி மந்திரியிடம் கொடுக்கப்பட்டது. அதுபோல் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவினரின் பரிந்துரை சம்பந்தமாகவும் எடுத்துச் சொல்லப்பட்டது.
அனைத்தையும் கேட்டுக்கொண்ட மத்திய கல்வி மந்திரி இதை விரைந்து பரிசீலிப்பதாக உறுதி அளித்து இருக்கிறார்.
நீட் தேர்வு பிரச்சினை மந்திரியின் சொந்த மாநிலமான ஒடிசாவிலும் இருப்பதாக சொன்னார். எனவே, நீட் விவகாரத்தில் நல்லது நடக்கும் என எதிர்பார்க்கிறோம். நம்பிக்கையோடு இருக்கிறோம். நீட் தேர்வு விலக்குக்கு மத்திய மந்திரி, ‘முடியாது, கஷ்டம்’ என்றே சொல்லவில்லை. அதுதான் மனநிறைவான விஷயம்.
பின்னர் மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம். தமிழகத்தைப் பொறுத்தவரை தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு 6 கோடி பேர் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். 2 டோஸ் வீதம் 12 கோடி தடுப்பூசிகள் தேவை.
ஆனால் இதுவரை வந்திருப்பது 1 கோடியே 70 லட்சத்து 38 ஆயிரத்து 460 தான். இன்று காலை (நேற்று) 91 ஆயிரத்து 580 தடுப்பூசிகள் வந்துள்ளன. கூடுதலாக சென்னைக்கு 6 லட்சம் ஊசிகளும் வருகின்றன. இந்த விவரங்களை மந்திரியிடம் எடுத்துச்சொல்லி, தடுப்பூசிகளை கூடுதலாக வழங்குமாறு கேட்டுக்கொண்டோம். மந்திரியும் இதை கேட்டுக்கொண்டு, அடுத்தடுத்த மாதங்களில் தமிழகத்தின் தேவையை பூர்த்தி செய்வதாக சொல்லி இருக்கிறார்.
கடந்த ஆட்சியில் 6 லட்சம் தடுப்பூசிகள் வீணாக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் தற்போது பொறுப்பேற்றிருக்கும் ஆட்சியில் அலுவலர்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக 1 கோடியே 70 லட்சம் தடுப்பூசிகள் வந்ததில் 1 கோடியே 71 லட்சம் ஊசிகள் செலுத்தப்பட்டு இருக்கிறது. வீணான தடுப்பூசிகளை சரிசெய்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன. இதைக்கேட்ட மத்திய மந்திரி மகிழ்ச்சி அடைந்தார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கலூரிக்கான கட்டுமான பணியை உடனே தொடங்குமாறு கேட்டோம். அவரும் ஜமைக்கா நிறுவனத்துடன் நேற்றைக்கு பேசி இருப்பதாகவும், விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுப்போம் என்றும் சொல்லி இருக்கிறார். 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் கட்டுமான பணியின் புத்தகத்தை மந்திரியிடம் கொடுத்து, உடனடியாக ஆய்வு செய்து ஒரு கல்லூரிக்கு 150 மாணவர்கள் என்ற வகையில் 1,650 மாணவர்களை புதிதாக சேர்க்க அனுமதி கேட்டோம். ஆய்வுக்கு அதிகாரிகளை அனுப்புவதாக சொன்னார்.
கோவையிலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அமைக்குமாறு கேட்டோம். அதையும் பரிசீலிப்பதாக சொன்னார். அனைத்து இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு கேட்டோம். அதையும் செய்வதாக உறுதி அளித்து இருக்கிறார். தமிழகத்தில் 3,988 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோய்க்கான மருந்துகளை கூடுதலாக தர கேட்டோம். அனுப்புவதாக சொன்னார்.
செங்கல்பட்டு, குன்னூர் தடுப்பூசி தயாரிப்பு மையங்களில் தடுப்பூசிகளை நாமே தயாரிக்கலாம் என்பது பற்றி சொன்னபோது இது சம்பந்தமாக கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம், விரைவில் நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி இருக்கிறார்.
கொரோனா 2-வது அலையின் புனரமைப்புக்கும், 3-வது அலையை எதிர்கொள்வதற்கு தயாராவதற்கும் ‘தேசிய சுகாதார திட்டம்’ சார்பில் ரூ.1,500 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட மந்திரி ரூ.800 கோடியை தற்போது விடுவிப்பதாகவும், இதை செலவழித்த பிறகு திட்ட மதிப்பீடுகளை ஆராய்ந்து தேவையான நிதியை தருவதாகவும் கூறினார்.
கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு ஜிகா வைரஸ் பரவி விடாமல் தடுக்க அங்கிருந்து வரும் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஜிகா வைரஸ் பாதிப்பு கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைப்பகுதிகளில் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story