சர்வதேச எல்லை பகுதியிலும் காணப்பட்டது ஜம்மு விமானப்படை தளம் அருகே மீண்டும் டிரோன் நடமாட்டம்

ஜம்மு விமானப்படை தளம் அருகிலும், சர்வதேச எல்லை பகுதியிலும் டிரோன் நடமாட்டம் காணப்பட்டது. ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதால் பின்வாங்கி சென்றது.
ஜம்மு,
காஷ்மீரில் ஜம்மு நகரில் இந்திய விமானப்படை தளம் உள்ளது. கடந்த மாதம் 27-ந்தேதி, வெடிகுண்டுகளை ஏற்றி வந்த 2 டிரோன்கள், அந்த தளம் மீது குண்டுகளை வீசிவிட்டு சென்றன. அதில், 2 விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர்.
அந்த தாக்குதல், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது என்று தெரிய வந்தது. தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.
அந்த சம்பவத்தை தொடர்ந்து, ஜம்முவில் ராணுவ பகுதிகள் அருகே டிரோன்கள் நடமாட்டம் அதிகரித்தது.
சில நாட்கள் இந்த நடமாட்டம் நின்றிருந்த நிலையில், மீண்டும் டிரோன்கள் நடமாட்டம் காணப்படுகிறது. ஜம்மு விமானப்படை தளம் அருகே சத்வாரி-காலுசக் இடையே நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு டிரோன் பறந்து வந்தது.
உரிய நேரத்தில் அதை கவனித்து விட்ட ராணுவ வீரர்கள், அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். சில ரவுண்டு சுட்டதை தொடர்ந்து, அந்த டிரோன் பின்வாங்கி சென்று மறைந்து விட்டது. இதுகுறித்து போலீசாருக்கு ராணுவ வீரர்கள் தகவல் தெரிவித்தனர். ஜம்மு நகரில் முழு உஷார்நிலை பிறப்பிக்கப்பட்டது.
அதுபோல், சர்வதேச எல்லை பகுதியில் அர்னியா செக்டாரில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, 200 மீட்டர் உயரத்தில் ஒரு டிரோன் பறப்பதை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பார்த்தனர்.
அந்த டிரோன், சிவப்பு ஒளியை பாய்ச்சியடி இருந்தது. இந்திய பகுதிக்குள் நுழைந்த அந்த டிரோன் மீது எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே, அது எல்லையை தாண்டி சென்று விட்டது.
மீண்டும் டிரோன் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று முன்தினம் மாலையில் ஜம்முவுக்கு சென்றார். அவர் டிரோன்கள் நடமாட்ட பின்னணியில் பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்ய வந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிபின் ராவத், ராணுவம், போலீஸ், துணை ராணுவம், உளவுப்பிரிவு ஆகியவற்றின் உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அவர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதிக்கு நேரில் செல்வார் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன எல்லை அருகே பாதுகாப்பு நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக லடாக்குக்கும் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story