மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மத்திய மந்திரி தெரிவித்தார்- அமைச்சர் துரைமுருகன்


மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மத்திய மந்திரி தெரிவித்தார்- அமைச்சர் துரைமுருகன்
x
தினத்தந்தி 16 July 2021 3:30 PM IST (Updated: 16 July 2021 3:54 PM IST)
t-max-icont-min-icon

மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மத்திய அமைச்சர் தெரிவித்ததாக டெல்லியில் அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

புதுடெல்லி

கடந்த 12ம் தேதி தமிழக அரசு சார்பில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என்பது உள்ளிட்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி, தமிழக நீர்பாசன துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா,

தமிழக பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவுத்தலைவர் பால் கனகராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று டெல்லி சென்றனர். அ.தி.மு.க சார்பில் கலந்துகொள்ளும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று காலை டெல்லி சென்றனர். இந்த குழு இன்று மதியம் 1 மணியளவில் மத்திய மந்திரி  கஜேந்திர சிங் செகாவத்தை அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேகதாது விவகாரம் தொடர்பாக மத்திய ஜல் சக்தித்துறை மந்திரியுடனான அனைத்துக் கட்சிக் குழு கூட்டம் நிறைவு பெற்றதும்
தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:-

கீழ் பாசன மாநிலங்களிடம் அனுமதி இல்லை, எனவே காவிரி நீர் மேலாண்மை வாரிய ஒப்புதலும் தேவை அவையும் கொடுக்கப்படவில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணையை கட்டக் கூடாது என சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக ஒன்றிய அமைச்சரிடம் பேசினோம். மேகதாது அணையை கட்டுவதற்கான சாத்தியக் கூறுகள் கர்நாடகாவுக்கு இல்லை என்று மத்திய அமைச்சர் கூறினார். மேகதாது அணைக்கு அனுமதி தரக்கூடாது என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்தினோம். கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்க மாட்டோம். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு துணை போகக் கூடாது என்று அழுத்தமாக வலியுறுத்தினோம்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணைக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய அரசு துணை போகக் கூடாது என வலியுறுத்தினோம். கீழ் பாசன மாநிலங்களிடம் அனுமதி இல்லை, எனவே காவிரி நீர் மேலாண்மை வாரிய ஒப்புதலும் தேவை அவையும் கொடுக்கப்படவில்லை என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என கூறினார்.

ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ  கூறும் போது மேகதாது அணை  தொடர்பாக அனைத்து  மாநில பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் போகமாட்டோம். பூனைக்கும் தோழன், பாலுக்கும் காவல்  என்று மத்திய அரசு இரட்டை நிலைப்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என கூறினார்.

சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியதாவது:- 

டி.பி.ஆர் தயாரிக்க  நிபந்தனைகள் அடிப்படையில் தான் அனுமதி கொடுக்கப்பட்டதே தவிர அதுவே முழு அனுமதி இல்லை என்று ஒன்று அமைச்சர் தெரிவித்துள்ளார் என கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா கூறியதாவது:-

மேகதாதுவில் அணை கட்டப்படாது என்ற நம்பிக்கையை மத்திய மத்திரி  இன்று எங்களுக்கு கொடுத்துள்ளார் என கூறினார்.

Next Story