கொரோனா 3வது அலையை தடுத்து நிறுத்த முதல்-மந்திரிகளிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்


கொரோனா 3வது அலையை தடுத்து நிறுத்த முதல்-மந்திரிகளிடம் பிரதமர் மோடி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 16 July 2021 3:17 PM GMT (Updated: 16 July 2021 3:17 PM GMT)

கொரோனா 3வது அலையை தடுக்க சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை மாநிலங்கள் வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.


புதுடெல்லி,

தமிழகம் உட்பட 6 மாநில முதல்-அமைச்சர்களுடன் காணொலி வழியே பிரதமர் மோடி பேசினார்.  அதில், கடந்த சில தினங்களில் தமிழகம், கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் 80% தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறினார்.

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி நோய் தடுப்பு பணிகளை மேற்கொண்டு, 3வது அலையை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

உருமாற்றம் அடைந்து வரும் வைரசுகளின் அபாயம் அதிகமாக இருக்கும் எனக் குறிப்பிட்ட பிரதமர், பரிசோதனை, கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் என்ற அணுகுமுறையை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

சுகாதார கட்டமைப்புகளை மாநிலங்களில் மேம்படுத்த ரூ.23 ஆயிரம் கோடி மதிப்பிலான தொகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளதகாவும், அதனை முறையாக பயன்படுத்தி சுகாதார மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை மாநிலங்கள் வலுப்படுத்த வேண்டும் என பிரதமர் வலியுறுத்தினார்.
 
குழந்தைகளை பெருந்தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என 6 மாநில முதல்-அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார்.  பொருளாதார நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுவதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மக்கள் கூட்டம் கூடுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி அச்சத்தை அதிகப்படுத்தி உள்ளது என தெரிவித்த பிரதமர் மோடி, பொது இடங்களில் கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதோடு, வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.




Next Story