கொரோனா 3-வது அலை:அடுத்த 100 நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்- மத்திய அரசு எச்சரிக்கை


கொரோனா 3-வது அலை:அடுத்த 100 நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்- மத்திய அரசு எச்சரிக்கை
x
தினத்தந்தி 17 July 2021 8:26 AM GMT (Updated: 17 July 2021 8:26 AM GMT)

கொரோனா 3-வது அலை: அடுத்த 100 நாட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுடெல்லி

கொரோனா இரண்டாம் அலை தற்போது கட்டுப்பாட்டில் இருந்தாலும், அடுத்த 100 முதல் 125 நாள்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம் என நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்)  வி.கே.பால்  கூறியுள்ளார்.

 நீதி ஆயோக் உறுப்பினர் டாக்டர்  வினோத் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

3-வது அலை வந்தால் அதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். நாட்டு மக்கள் வைரசால் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் மக்கள் தொடா்ந்து பாதிக்கப்பட்டு வருவதால்தான், கொரோனா மூன்றாம் அலை வருவது குறித்த கேள்வியும் எழுகிறது. ஒட்டுமொத்த நோய் எதிா்ப்புத் திறனை நாம் இன்னும் பெறவில்லை. தடுப்பூசி திட்டத்தால் மக்களுக்கு நோய் எதிா்ப்புத் திறனை மேம்படுத்தும் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

எனவே, அடுத்த 100 முதல் 125 நாள்களுக்கு மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம்.

கொரோனா பாதிப்பு நிலைமை இப்போது கட்டுப்பாட்டில் உள்ளது என்றாலும், தினசரி பாதிப்பு எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வந்த நிலையில், அது தற்போது குறையும் வேகம் குறைந்துள்ளது நமக்கான எச்சரிக்கையாகும். 

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை நாம் முழுமையாகப் பின்பற்றினால், மூன்றாம் அலை தாக்குதலை தடுக்க முடியும். அடுத்த மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு தடுப்பூசி திட்டத்தையும் நாம் தீவிரப்படுத்த வேண்டும் என கூறினார்.

Next Story