29 மசோதாக்கள் தாக்கல் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது


29 மசோதாக்கள் தாக்கல் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது
x
தினத்தந்தி 19 July 2021 12:51 AM GMT (Updated: 2021-07-19T06:21:10+05:30)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று கூடுகிறது. தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், கேட்டுக் கொண்டார்.

புதுடெல்லி, 

நமது நாட்டில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஒவ்வொரு ஆண்டிலும் ஜூலை மாதம் தொடங்குவது வாடிக்கையான ஒன்று.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2-வது அலையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முழுமூச்சுடன் போராடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்திலும் மழைக்கால கூட்டத்தொடருக்காக நாடாளுமன்றம் இன்று (திங்கட்கிழமை) கூடுகிறது.

இந்த கூட்டத்தொடர் அடுத்த மாதம் 13-ந் தேதி முடிகிறது.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2-வது முறையாக பதவி ஏற்று 2 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், முதல் முறையாக கடந்த 7-ந் தேதி மத்திய மந்திரி சபையில் பெருமளவில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்றம் இன்று கூடுவது முக்கியத்துவம் பெறுகிறது.

முதல் நாளான இன்று மக்களவை, மாநிலங்களவை என இரு சபைகளிலும், புதிதாக பதவியேற்றுள்ள மந்திரிகளை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைப்பார்.

மக்களவை இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு வென்ற புதிய எம்.பி.க்களும் இன்று பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார்கள்.

இந்த கூட்டத்தொடரில் 29 மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இவற்றில் 3 மசோதாக்கள், சமீபத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டங்களுக்கு மாற்றாக அமையும். இவற்றில் ஒன்று, கடந்த மாதம் 30-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட ‘அத்தியாவசிய பாதுகாப்பு சேவைகள் அவசர சட்டம்-2021’ ஆகும். இது அத்தியாவசிய பாதுகாப்பு சேவையில் ஈடுபடுவோர் கிளர்ச்சி மற்றும் வேலை நிறுத்ததத்தில் ஈடுபடுவதை தடை செய்கிறது.

பொதுவாக அவசர சட்டங்கள், நாடாளுமன்ற அமர்வு தொடங்கிய 6 வாரங்களுக்குள் முறைப்படி மசோதா தாக்கல் செய்து சட்டம் ஆகாவிட்டால் காலாவதியாகி விடும் என்பது இங்கு குறிப்பிடத்தக்க அம்சம்.

நடப்பு நிதி ஆண்டுக்கான மானியங்களுக்கான துணைக்கோரிக்கைகள், மானியங்களுக்கான கூடுதல் கோரிக்கைகள் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும்.

இந்த கூட்டத்தொடர் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் நடப்பதால், கொரோனா கால கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படும். இரு சபைகளும் ஒரே நேரத்தில் செயல்படும். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படும்.

444 மக்களவை எம்.பி.க்களும், 218 மாநிலங்களவை எம்.பி.க்களும் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுக்கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

எதிர்க்கட்சிகள் முடிவும், தே.ஜ.கூட்டணி ஆலோசனையும்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வரிந்து கட்ட உள்ளன.

குறிப்பாக கொரோனா தொற்றின் 2-வது அலையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட உயிரிழப்புகள், கொரோனா வைரஸ் தடுப்பூசி தட்டுப்பாடு, ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொடும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரபேல் போர் விமான பேரத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்து பிரான்ஸ் நாட்டில் தொடங்கி உள்ள விசாரணை என பல பிரச்சினைகளை அரசுக்கு எதிராக எழுப்பி விவாதிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

இவற்றில் எதிர்க்கட்சிகளுக்கு தகுந்த விதத்தில் பதில் அளிப்பது குறித்து பிரதமர் மோடி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தை நேற்று கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் மூத்த மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, அப்னாதளம் தலைவர் அனுபிரியா படேல், ஐக்கிய ஜனதாதளம் தலைவர் ராம்நாத் தாக்குர், அ.தி.மு.க. எம்.பி. நவநீத கிருஷ்ணன், இந்திய குடியரசு கட்சி தலைவர் ராம்தாஸ் அத்வாலே, லோக்ஜனசக்தி கட்சி தலைவர் பசுபதி பராஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த குளிர்கால கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து மாநிலங்களவை அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை சபையின் தலைவரான துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று முன்தினம் டெல்லியில் கூட்டி ஆலோசனை நடத்தினார் அப்போது அவர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில், மக்களோடு நின்று அது தொடர்பான அனைத்து விஷயங்களையும் விவாதித்து, மக்களின் கவலைகளுக்கு தீர்வு காணுமாறு கேட்டுக்கொண்டார். சுமுகமான முறையில், ஆக்கப்பூர்வமான வகையில் சபையை நடத்துவதை அனைத்துக்கட்சி தலைவர்களும் உறுதிப்படுத்துமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிலையில் மக்களவை அனைத்துக்கட்சி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், மாநிலங்களவை ஆளுங்கட்சி தலைவர் பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ்), மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, டெரெக் ஓ பிரையன் (திரிணாமுல் காங்கிரஸ்), திருச்சி சிவா (தி.மு.க.), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி), சதீஷ் மிஷ்ரா (பகுஜன் சமாஜ்), அனுபிரியா படேல் (அப்னா தளம்), பசுபதி பராஸ் (லோக்ஜனசக்தி கட்சி) உள்ளிட்டோர் என 33 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் தொடக்கத்தில் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, “விதிகளின்கீழ் எந்தவொரு தலைப்பிலும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது. சபைகளை நடத்துவதில் அனைத்துக்கட்சிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தொடரில் 19 அமர்வுகள் இடம்பெறும், 31 அரசு அலுவல்கள் (29 மசோதாக்கள், 2 நிதி விவகாரங்கள் உள்பட) மேற்கொள்ளப்படும், அவசர சட்டங்களுக்கு மாற்றாக 6 மசோதாக்கள் கொண்டு வரப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

பிரதமர் மோடி இந்த கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

இரு சபைகளிலும் அர்த்தமுள்ள விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அரசு ஆரோக்கியமான முறையில், அர்த்தமுள்ள விதத்தில் விவாதங்களை நடத்த தயாராக இருக்கிறது.

நமது ஆரோக்கியமான ஜனநாயக மரபுகள்படி, மக்கள் தொடர்பான பிரச்சினைகள் இணக்கமான முறையில் எழுப்பப்பட வேண்டும். இந்த விவாதங்களுக்கு பதில் அளிக்க அரசுக்கு வாய்ப்பு தரப்பட வேண்டும். இதுபோன்ற உகந்த சூழலை உருவாக்குவது அனைவரின் பொறுப்பும் ஆகும்.

அடிமட்ட அளவிலான பிரச்சினைகளை மக்கள் பிரதிநிதிகள் அறிவார்கள். எனவே விவாதங்களில் கலந்து கொண்டு பேசுவது முடிவு எடுக்கிற செயல்முறையை வளமாக்கும். பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். இது நாடாளுமன்ற நடவடிக்கைகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ள உதவும் என நம்புகிறேன்.

ஆரோக்கியமான விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். அனைத்துக்கட்சி தலைவர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். சபைகள் சுமுகமாக இயங்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story