குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும்

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனை: 2-6 வயது குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸ் அடுத்த வாரம் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி
கொரோனா தொற்றுநோய்க்கான மூன்றாவது அலைக்கு முன்னதாக இந்தியாவில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிக்கான சோதனைகள் நடந்து வருகின்றன. முன்னதாக, எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா, குழந்தைகளுக்கான தடுப்பூசி செப்டம்பரில் கிடைக்கக்கூடும் என்று கூறி இருந்தார்.
18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகள் நிறைவடையும் நிலையில் இருப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
பாரத் பயோடெக்கின் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், 2-6 வயது குழந்தைகளுக்கான கோவாக்சின், அடுத்த வாரம் சோதனைகளில் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவாக்சின் இரண்டாவது டோஸ் ஏற்கனவே 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப பிரித்து சோதனை நடத்தப்படுகிறது, இதில் ஒவ்வொரு பிரிவிலும் 175 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் முடிந்த பிறகு, ஆகஸ்ட் இறுதிக்குள் இடைக்கால அறிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசி குழந்தைகளுக்கு எவ்வளவு பாதுகாப்பானது என்பதை இடைக்கால அறிக்கை தெளிவுபடுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மட்டுமல்ல, இந்திய மருந்து நிறுவனமான ஜைடஸ் காடிலாவின் குழந்தைகளுக்கான தடுப்பூசிக்கான சோதனைகளும் தற்போது நடந்து வருகின்றன.
Related Tags :
Next Story