ராகுல் காந்தியின் செல்போனை உளவு பார்ப்பதால் பா.ஜ.க.வுக்கு எந்த பயனும் இல்லை; நடிகை குஷ்பு பேட்டி


ராகுல் காந்தியின் செல்போனை உளவு பார்ப்பதால் பா.ஜ.க.வுக்கு எந்த பயனும் இல்லை; நடிகை குஷ்பு பேட்டி
x
தினத்தந்தி 20 July 2021 1:18 PM GMT (Updated: 20 July 2021 1:27 PM GMT)

ராகுல் காந்தியின் செல்போனை உளவுபார்ப்பதால் பா.ஜ.க.வுக்கு எந்த பயனும் இல்லை என நடிகை குஷ்பு பேட்டியில் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

இந்தியாவில் பெகாசஸ் மூலம் வேவு பார்க்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.  இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.  இதனால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்போன்களும் உளவு பார்க்கப்பட்டன என கூறப்பட்டது.  5 முறை தொலைபேசியை மாற்றியும், என்னை உளவு பார்த்தனர் என கிஷோர் கூறியுள்ளார்.

இதேபோன்று, பிரபல பத்திரிகையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என மொத்தம் 300 பேரின் செல்போன்கள் வேவு பார்க்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
 
இந்த நிலையில் நடிகை மற்றும் பா.ஜ.க.வை சேர்ந்தவரான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டது.  இதுபற்றி நடவடிக்கை எடுக்க கோரி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபுவிடம் குஷ்பு புகார் அளித்துள்ளார்.

அதன்பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, எனது ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.  அதனால், அதனை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக டி.ஜி.பி.யிடம் புகார் அளித்துள்ளேன். அவரும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து உள்ளார் என கூறினார்.

ராகுல்காந்தி செல்போன் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்பட்டது பற்றிய செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, ராகுல் காந்தியின் செல்போனை உளவுபார்ப்பதால் பா.ஜ.க.வுக்கு எந்த பயனும் இல்லை என கூறியுள்ளார்.


Next Story