எனது செல்போனும் ஒட்டு கேட்கப்படுகிறது பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் - மம்தா பானர்ஜி அழைப்பு


எனது செல்போனும் ஒட்டு கேட்கப்படுகிறது பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் - மம்தா பானர்ஜி அழைப்பு
x
தினத்தந்தி 22 July 2021 6:53 AM IST (Updated: 22 July 2021 6:53 AM IST)
t-max-icont-min-icon

2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர வேண்டும் என்று மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

கொல்கத்தா, 

கடந்த 1993-ம் ஆண்டு ஜூலை 21-ந் தேதி, மம்தா பானர்ஜி காங்கிரசில் இருந்தபோது நடத்திய போராட்டத்தில், போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 தொண்டர்கள் பலியானார்கள். அதனால், அந்த நாளை தியாகிகள் தினமாக ஆண்டுதோறும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடைபிடித்து வருகிறது.

தியாகிகள் தினத்தையொட்டி, மம்தா பானர்ஜி நேற்று காணொலி காட்சி மூலம் பேசினார். அவர் பேசியதாவது:-

இந்தியா என்னும் ஜனநாயக நாட்டை ஆரோக்கியமான நாடாக மாற்றுவதற்கு பதிலாக உளவு நாடாக மாற்ற பா.ஜனதா முயன்று வருகிறது. பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருட்களின் வரி மூலம் கிடைக்கும் வருவாயை ஆபத்தான மென்பொருள் மூலம் உளவு பார்ப்பதற்கு மத்திய அரசு பயன்படுத்துகிறது. நலத்திட்டங்களுக்கு அந்த பணத்தை பயன்படுத்தவில்லை.

எனது செல்போன் ஒட்டு கேட்கப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லோருக்கும் தங்கள் செல்போன் ஒட்டு கேட்கப்படுவது தெரியும். நான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடனோ, வேறு எதிர்க்கட்சி தலைவர்களுடனோ, முதல்-மந்திரிகளுடனோ செல்போனில் பேச முடியவில்லை.

ஏனென்றால், எங்கள் செல்போன்களை மத்திய அரசு ஒட்டு கேட்கிறது. ஆனால், இப்படி ஒட்டு கேட்டாலும், 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தப்ப முடியாது.

கொரோனா இரண்டாவது அலையை கையாள்வதில் மோடி அரசு மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. அதிக சக்திவாய்ந்த வைரஸ் கட்சியான பா.ஜனதாவை என்ன விலை கொடுத்தாவது தோற்கடிக்க வேண்டும்.இந்த பொதுக்கூட்டத்தில் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பங்கேற்ற காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

பா.ஜனதாவையும், அதன் சர்வாதிகார ஆட்சியையும் எதிர்க்கும் அனைவரும் அதை தோற்கடிக்க வேண்டும். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்.

நாட்டை பா.ஜனதா இருளில் தள்ளி உள்ளது. நாம் அதை புதிய வெளிச்சத்துக்கு அழைத்து செல்வோம். பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து நீக்கும் வரை இந்த போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

© 2020 All Rights Reserved. Powered by Summit
1 More update

Next Story