போராட்ட பாதையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்; விவசாயிகளுக்கு மத்திய வேளாண் மந்திரி அழைப்பு


போராட்ட பாதையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்; விவசாயிகளுக்கு மத்திய வேளாண் மந்திரி அழைப்பு
x
தினத்தந்தி 22 July 2021 5:56 PM GMT (Updated: 2021-07-22T23:26:21+05:30)

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

டெல்லி ஜந்தர்மந்தரிலும் போராட்டத்தை தொடங்கினர்.விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துள்ளன.
இந்தநிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். 

அதற்கு அவர் கூறியதாவது:-
போராட்ட பாதையை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று பத்திரிகையாளர்கள் மூலமாக அழைப்பு விடுக்கிறேன். விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களில் உள்ள ஆட்சேபகரமான அம்சங்களுடன் வந்தால், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.விவசாயிகள் மீது மத்திய அரசு அக்கறையாக இருக்கிறது. கடந்த 7 ஆண்டுகளில், மோடி அரசு விவசாய துறையில் பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவற்றின் பலன்கள், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை சென்றடைந்துள்ளன.3 வேளாண் சட்டங்களும் அந்த திசையை நோக்கிய நடவடிக்கைதான். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள், அந்த சட்டங்களை ஆதரிக்கிறார்கள்.இதற்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தியபோது, வேளாண் சட்டங்களில் எந்தெந்த ஷரத்துகள் ஆட்சேபகரமாக உள்ளன என்பதை சொன்னால் தீர்வு காணலாம் என்று விவசாய பிரதிநிதிகளிடம் கேட்டோம். ஆனால், அவர்கள் ஒட்டுமொத்தமாக அந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story