ஆக்ரா துப்பாக்கிச் சண்டை: கொள்ளை கும்பல் தலைவன் உள்பட 2 பேர் சுட்டுக்கொலை

ஆக்ராவில் உள்ள ஜாக்னர் பகுதியில் நேற்று கொள்ளைகும்பல் தலைவன் பதான் சிங் மற்றும் அவரது கூட்டாளி கொல்லப்பட்டனர்.
ஆக்ரா
உத்தரபிரதேசத்தில் சம்பல் கொள்ளையர்களுடன் ஆக்ரா போலீசார் நேற்று முன்தினம் இரவு துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இதில் கும்பலின் தலைவன் உள்ளிட்ட இருவர் கொல்லப்பட்டனர்.
ஆக்ராவில் உள்ள ஜாக்னர் பகுதியில் நேற்று கொள்ளைகும்பல் தலைவன் பதான் சிங் மற்றும் அவரது கூட்டாளி அக்சே பாண்டே கொல்லப்பட்டனர்.
கடந்த வாரம் ஆக்ராவைச் சேர்ந்த டாக்டர் உமகாந்த் குப்தா ரூ.5 கோடி கேட்டு கடத்தப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக பதான் சிங் இருந்தார். டாகடர் சம்பல் பள்ளத்தாக்கிலிருந்து உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போலீஸ் கூட்டு குழுவினரால் மீட்கப்பட்டார்.
ஆக்ரா மாவட்ட எஸ்.எஸ்.பி.யான தமிழர் ஜி.முனிராஜ் தலைமையிலானப் படை 24 மணி நேரத்தில் மீட்டது. இந்தக் கும்பலைச் சேர்ந்த ஒரு இளம்பெண் உள்பட 6 பேரும்கைது செய்யப்பட்டனர். இவர்களில் தப்பிய சம்பல் கும்பலின் தலைவன் பதன் சிங் தோமர் தலைமறைவானார். இவரது தலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஆக்ராவின் எல்லையிலுள்ள கச்சாபுரா பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்றுள்ளது. இதை துரத்திச் சென்ற ஜக்னேர் போலீஸ் நிலைய போலீசார், உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். ஓரிடத்தின் இருண்ட பகுதியில் சுற்றிவளைக்கப்பட்ட கொள்ளையர்களில் பதன்சிங் தோமரும் இருப்பதாகத் தெரிந்துள்ளது. இதை அறிந்த எஸ்எஸ்பி முனிராஜ் நேரில் சென்றார் அங்கு இருதரப்பினர் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் பதன் சிங் தோமர், அக்சே பாண்டே என இருவர் கொல்லப்பட்டனர்.
எஸ்எஸ்பி முனிராஜ் ஒரு தமிழராவார். உத்தரபிரதேசத்தின் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் பணியாற்றிய முனிராஜ், தர்மபுரியின் அ.பாப்பாரப்பட்டியை சேர்ந்தவர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர்,2009-ல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றார். இவரது அதிரடி நடவடிக்கைகளால் இவரை ‘உத்தரபிரதேச சிங்கம்’ என்று அம்மாநில மக்கள் அழைக்கின்றனர். கடந்த பிப்ரவரியில் ஆக்ராவின் எஸ்எஸ்பியாக பொறுப்பேற்றார். அப்போது முதல் நடைபெற்ற குற்றச்செயல்களின் 3 சம்பவங்களில் குற்றவாளிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story