சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நிதிஷ்குமார் கோரிக்கை


சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த நிதிஷ்குமார் கோரிக்கை
x
தினத்தந்தி 24 July 2021 5:37 PM GMT (Updated: 2021-07-24T23:07:37+05:30)

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு மறுப்பு
மத்திய அரசு சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பல்வேறு கட்சிகளும், சில மாநில அரசுகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் இதற்கு மத்திய அரசு மறுத்து உள்ளது.இது தொடர்பாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய உள்துறை இணை மந்திரி, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினரை தவிர பிற சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது இல்லை என மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.ஆனால் மத்திய அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பா.ஜனதாவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ் குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெளியிடவில்லை
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த 1990-ம் ஆண்டு முதல் எழுப்பி வருகிறேன். கடந்த 2010-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அதன் தரவுகள் பொது வெளியில் வெளியிடவில்லை.ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் சாதி வாரியான மக்கள் தொகை குறித்து நியாயமான மதிப்பீடுகள் செய்வதற்கு சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

ஒரு முறையாவது நடத்த வேண்டும்
இது கொள்கைகளை வகுப்பதற்கும், சமூகத்தின் இலக்கு பிரிவினருக்கான திட்டங்களைத் தொடங்கவும் அரசுக்கு உதவும். இதன் மூலம் ஏழை மற்றும் சாதி அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் அரசு திட்டங்களின் நன்மைகளை மிக எளிதாகவும் வசதியாகவும் பெறுவார்கள். அப்படி அனைவருக்கும் இது பலனளிக்கும்.ஆனால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது. இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து, சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு முறையாவது நடத்த வேண்டும்.

இவ்வாறு நிதிஷ்குமார் கூறினார்.

பெகாசஸ் விவகாரத்தில் நடவடிக்கை
முன்னதாக அவர் தனது டுவிட்டர் தளத்திலும், ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இதுதொடர்பான தீர்மானம் முதன்முதலில் பீகார் சட்டமன்றத்தில் பிப்ரவரி 18, 2019 மற்றும் மீண்டும் பிப்ரவரி 27, 2020 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான மத்திய அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி இருந்தார்.பெகாசஸ் மென்பொருள் மூலம் செல்போன் ஒட்டு கேட்பில் ஈடுபட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறிய நிதிஷ்குமார், இது தொடர்பாக சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு கூறியிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

Next Story