கர்நாடக முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் நான் இல்லை: மந்திரி ஈசுவரப்பா


கர்நாடக முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் நான் இல்லை: மந்திரி ஈசுவரப்பா
x
தினத்தந்தி 24 July 2021 11:50 PM IST (Updated: 24 July 2021 11:50 PM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் நான் இல்லை என்று மந்திரி ஈசுவரப்பா தெரிவித்துள்ளார்.

தாவணகெரேயில் மந்திரி ஈசுவரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மேலிடம் முடிவு செய்யும்
நான் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை மந்திரியாக இருந்து வருகிறேன். இந்த துறையில் நான் தொடர்ந்து மந்திரியாக இருப்பேனா? அல்லது வேறு துறையை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படுமா? என்பது பற்றி எதுவும் சொல்ல முடியாது. ஏனெனில் முதல்-மந்திரி மாற்றப்பட்டால், மந்திரிசபையும் மாற்றி அமைக்கப்படும். அதனால் தான் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை மந்திரியாக இருப்பேனா? என்பது தெரியாது என்று சொல்லி வருகிறேன்.

முதல்-மந்திரி பதவியில் இருந்து எடியூரப்பா மாற்றப்படுவார் என்பது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. 6 நாட்களோ, 6 மாதங்களோ, அதற்குள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதுபற்றி பா.ஜனதா மேலிடம் தான் முடிவு செய்யும். முதல்-மந்திரியை மாற்றும் விவகாரம் குறித்து அதிகம் பேச விரும்பவில்லை. எனது துறையை வேறு ஒருவர் கவனித்து கொள்ளலாம். அதற்கு ஏராளமானவர்கள் உள்ளனர்.

போட்டியில் நான் இல்லை
முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் நான் இல்லை. எனது பெயரை இழுக்க வேண்டாம் என்று தொடர்ந்து கூறி வருகிறேன். என் மீது அன்பு கொண்டவர்கள், நான் முதல்-மந்திரி ஆவேன் என்று சொல்கிறார்கள். அவர்களிடம் அதுபோன்று கூற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். சித்தராமையா, டி.கே.சிவக்குமார் போல நான் முதல்-மந்திரி என்று சொல்லி கொள்ள விரும்பவில்லை. அவர்களது ஆதரவாளர்கள் தான் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் செல்லும் இடங்களில் கோஷமிட்டு வருகின்றனர்.காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் பல முறை ஆட்சியில் இருந்துள்ளது. அப்படி இருந்தும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு முதல்-மந்திரி பதவி கொடுக்கவில்லை. தலித் முதல்-மந்திரி விவகாரம் பற்றி காங்கிரஸ் தலைவர்கள் பேசுவதற்கு தகுதி இல்லை. மத்திய மந்திரியாக பதவி வகித்த பலர் வயது மூப்பு காரணமாக, மந்திரி பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். கர்நாடகத்தில் இளம்வயதினருக்கு முதல்-மந்திரி பதவி வழங்கப்படுமா? என்பது பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

Next Story