காஷ்மீரில் துப்பாக்கி உரிமம் முறைகேடு; 40 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை


காஷ்மீரில் துப்பாக்கி உரிமம் முறைகேடு; 40 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
x
தினத்தந்தி 25 July 2021 4:55 AM IST (Updated: 25 July 2021 4:55 AM IST)
t-max-icont-min-icon

காஷ்மீரில் முறைகேடாக துப்பாக்கி உரிமம் வழங்கிய வழக்கில், டெல்லி உட்பட 40 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது.


புதுடெல்லி,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆயிரக்கணக்கானோருக்கு முறைகேடாக துப்பாக்கி உரிமம் வழங்கப்பட்டு உள்ளது என புகார் எழுந்தது. இதுதொடர்பாக இரு வழக்குகளை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில், காஷ்மீரின் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள் தரப்பில், அம்மாநிலத்தில் வசிக்காதோருக்கும் போலி ஆவணங்கள் வாயிலாக துப்பாக்கி உரிமங்கள் வழங்கப்பட்ட விவரம் தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீநகர், ஜம்மு, நொய்டா, குர்கான் உள்பட 12க்கும் மேற்பட்ட இடங்களில் மாவட்ட கலெக்டர்களுடன் தொடர்புடைய இடங்களில் கடந்த 2019ல் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினர்.

இந்த வழக்குகளில் அடுத்ததாக ஜம்மு, ஸ்ரீநகர், உதம்பூர், ரஜவுரி, அனந்த்நாக், பாராமுல்லா மாவட்டங்கள் மற்றும் டெல்லியில் அரசு அதிகாரிகளின் வீடுகள் உள்பட 40 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனைகளை நடத்தினர்.

இதில், ஐ.ஏ.ஏஸ். அதிகாரிகள் ஷாஹித் இக்பால் சவுத்ரி மற்றும் நீரஜ் குமார் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்துள்ளது என சி.பி.ஐ. செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.


Next Story