பெகாசஸ் மென்பொருளுக்கு பணம் கொடுத்தது யார்? சிவசேனா கேள்வி

பெகாசஸ் மென்பொருளுக்கு பணம் கொடுத்தது யார்? என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
குண்டு போட்டதற்கு சமம்
பெகாசஸ் எனப்படும் இஸ்ரேல் நாட்டின் உளவு அமைப்பு மூலம் இந்தியாவில் எதிர்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்டவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன. எனினும் இந்த தகவலை மத்திய அரசு மறுத்தது. இந்தநிலையில் பெகாசஸ் மூலம் உளவு பார்க்க நிதி உதவி அளித்தது யார்? என சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சி பத்திரிகையான சாம்னாவில் கூறியிருப்பதாவது:-
நவீன தொழில்நுட்பம் நம்மை மீண்டும் அடிமை காலத்திற்கு கொண்டு சென்று உள்ளது. பெகாசஸ் உளவு பார்க்கப்பட்ட சம்பவத்திற்கும், ஹிரோசிமாவில் குண்டு போட்டத்திற்கு எந்த வித்தியாசமும் இல்லை. ஹிரோசிமாவில் மக்கள் உயிரிழந்தனர். பெகாசஸ் சம்பவத்தில் சுதந்திரம் உயிரிழந்து உள்ளது. அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள், சமூக ஆா்வலர்கள் தாங்கள் உளவுபார்க்கப்படலாம் என்ற அச்சத்தில் உள்ளனர். நீதி துறையினரும், ஊடக பிரிவினரும் அதே அழுத்தத்தில் உள்ளனர். நாட்டின் தலைநகரில் சுதந்திரத்திற்கான சூழல் சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டது.
பணம் கொடுத்தது யார்?
பெகாசஸ் மென்பொருள் (சாப்ட்வேர்) ஒரு லைசன்சுக்கு இஸ்ரேல் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.60 கோடி கட்டணம் வசூலித்து உள்ளது. ஒரு லைசன்சில் 50 பேரை உளவு பார்க்க முடியும்.அப்போது 300 பேரை உளவு பார்க்க 6-ல் இருந்து 7 லைசன்ஸ் தேவைப்படும். எவ்வளவு பணம் செலவிடப்பட்டு இருக்கிறது? யார் இந்த தொகையை கொடுத்தது? இஸ்ரேல் நிறுவனம் அரசுகளுக்கு மட்டுமே பெகாசஸ் விற்கப்பட்டதாக கூறுகிறது.அப்படியென்றால் இந்தியாவில் எந்த அரசு அந்த மென்பொருளை வாங்கியது? இந்தியாவில் 300 பேரை உளவு பார்க்க ரூ.300 கோடி செலவிடப்பட்டுள்ளது. உளவு பார்க்க இவ்வளவு பெரிய தொகையை செலவு செய்ய நமது நாட்டுக்கு தகுதி இருக்கிறதா?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story