டெல்லி ஜந்தர் மந்தரில் பெண் விவசாயிகள் நடத்திய ‘உழவர் நாடாளுமன்றம்’


டெல்லி ஜந்தர் மந்தரில் பெண் விவசாயிகள் நடத்திய ‘உழவர் நாடாளுமன்றம்’
x
தினத்தந்தி 26 July 2021 5:43 PM GMT (Updated: 26 July 2021 5:43 PM GMT)

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் பெண் விவசாயிகள், உழவர் நாடாளுமன்றம் நிகழ்சியை நடத்தினர்.

ஜந்தர் மந்தரில் போராட்டம்
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா போன்ற மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு உள்ளனர்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருவதால், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர்கள் டெல்லி ஜந்தர் மந்தரிலும் போராடி வருகின்றனர். குறிப்பாக தினமும் சுமார் 200 விவசாயிகள் அங்கு உழவர் நாடாளுமன்றம் நடத்தி வருகின்றனர்.

உழவர் நாடாளுமன்றம்
விவசாயிகளின் டெல்லி முற்றுகை 8 மாதங்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், இன்றைய போராட்டத்தில் பெண் விவசாயிகள் பங்கேற்றனர். அதன்படி உத்தரபிரதேசம், பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுமார் 200 பெண் விவசாயிகள் ஜந்தர் மந்தரில் குவிந்தனர். அங்கு உழவர் நாடாளுமன்றம் நடத்திய அவர்கள், 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். குறிப்பாக இன்றைய உழவர் நாடாளுமன்றத்தில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் மீது கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதமும் 
கோரப்பட்டது.

அரசியல்வாதியாக மாறியுள்ளனர்
இந்த நிகழ்ச்சியை பிரபல அரசியல்வாதியும், பேச்சாளருமான சுபாஷினி அலி ஒருங்கிணைத்து நடத்தினார். நிகழ்ச்சியில் முதலில் தேசிய கீதமும், பின்னர் போராட்டக்களத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலியும், பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தும் உரையும் நடந்தது. இந்த போராட்டம் குறித்து சுபாஷினி அலி பின்னர் கூறுகையில், ‘இன்றைய நாடாளுமன்றம் 
பெண்களின் வலிமையை வெளிப்படுத்தி இருக்கிறது. பெண்களால் விவசாயமும் செய்ய முடியும், நாட்டை வழிநடத்தவும் முடியும். அத்துடன் இன்று ஒவ்வொருவரும் ஒரு அரசியல்வாதியாக மாறியிருக்கிறார்கள்’ என்று கூறினார்.

சாப்பிட மாட்டார்கள்
மேலும் அவர் கூறும்போது, ‘எங்களை (விவசாயிகள்) பயங்கரவாதிகள், காலிஸ்தானிகள் என பல்வேறு பெயர்களில் அரசு அழைக்கிறது. ஆனால் நாங்கள் எங்கள் வலிமையை காட்டினால், இந்த பயங்கரவாதிகள் மற்றும் காலிஸ்தானிகள் விளைவிக்கும் உணவை அவர்கள் சாப்பிட மாட்டார்கள்’ என்றும் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் விவசாயிகள் அனைவரும், 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் எனவும், திருத்தங்களை ஏற்கமாட்டோம் எனவும் கூறினர். அத்துடன் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த 
அவர்கள், அது இல்லையென்றால் சாதாரண மக்கள் மிகுந்த பாதிப்படைவார்கள் எனவும் கூறினர்.

Next Story