மராட்டியத்தில் வெள்ள நிவாரணம் 2 நாளில் அறிவிக்கப்படும்: அஜித்பவார்


மராட்டியத்தில் வெள்ள நிவாரணம் 2 நாளில் அறிவிக்கப்படும்: அஜித்பவார்
x
தினத்தந்தி 26 July 2021 8:19 PM GMT (Updated: 26 July 2021 8:19 PM GMT)

வெள்ள நிவாரணம் இன்னும் 2 நாளில் அறிவிக்கப்படும் என்று அஜித்பவார் கூறினார்.

படகில் சென்று ஆய்வு
மராட்டியத்தில் பெய்த மழைக்கு ரத்னகிரி, ராய்காட், சத்தாரா, கோலாப்பூர், சாங்கிலி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளன. பல பகுதிகளில் தற்போதும் கூட வெள்ளம் வடியாமல் உள்ளது. இதேபோல முக்கியமான ஆறுகளில் நீர்மட்டம் அபாய நிலையை தாண்டி தான் உள்ளது.இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடந்த சனிக்கிழமை ராய்காட்டிலும், நேற்று முன்தினம் ரத்னகிரியிலும் வெள்ளபாதிப்புகளை ஆய்வு செய்தார். அப்போது அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதி அளித்தார்.

இதற்கிடையே துணை முதல்-மந்திரி அஜித்பவார் நேற்று சாங்கிலி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். அவருடன் நீர்வளத்துறை மந்திரி ஜெயந்த் பாட்டீல், மீட்பு மற்றும் நிவாரணத்துறை மந்திரி விஜய் வாடேடிவார், இணை மந்திரி விஸ்வஜித் கதம் ஆகியோரும் சென்றனர். இதில் பில்வாடி என்ற கிராமத்தை வெள்ளம் சூழ்ந்து இருந்தது. இதையடுத்து துணை முதல்-மந்திரி அஜித்பவார் உள்ளிட்டவர்கள் படகு மூலம் அந்த பகுதிக்கு சென்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். இதேபோல அவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2 நாளில் நிவாரணம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் மகா விகாஸ் அகாடி அரசு செய்யும். வெள்ள நிவாரணம் அறிவிப்பு குறித்து இன்னும் 2 நாட்களில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் முடிவு எடுக்கப்படும். கிருஷ்ணா நதியில் உள்ள அணைகளில் ஏற்கனவே தண்ணீர் இருப்பு போதுமான அளவு இருந்தது. இந்த நிலையில் அந்த அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மிதமிஞ்சிய மழையால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story