கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை நாளை காலை பதவியேற்பு


கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை நாளை காலை பதவியேற்பு
x
தினத்தந்தி 27 July 2021 11:59 PM IST (Updated: 27 July 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை நாளை காலை 11 மணிக்கு பதவியேற்று கொள்கிறார்.


பெங்களுரு, 

கர்நாடகாவில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி செய்து வருகிறது.  கட்சியில் அவருக்கு எதிராக தொடர்ந்து அதிருப்தி நிலவி வந்தது.  இதனால், அவர் ராஜினாமா செய்ய கூடும் என்று பேசப்பட்டு வந்தது.

இதனை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட சுட்டி காட்டி வந்தது.  இந்நிலையில், எடியூரப்பா, பதவியேற்று நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கவர்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அடுத்த முதல்-மந்திரியை தேர்வு செய்ய பா.ஜ.க. மேலிட பார்வையாளர்களாக அனுப்பி வைக்கப்பட்ட மத்திய மந்திரிகளான தர்மேந்திர பிரதான் மற்றும் கிஷன் ரெட்டி ஆகியோர் அம்மாநில பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரியாக மீண்டும் லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவரை பா.ஜ.க. நியமிக்க வாய்ப்புள்ளது என்று கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில், லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.வான தற்போதைய கர்நாடக உள்துறை மந்திரி பசவராஜ் பொம்மை முதல்-மந்திரி பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இவரது தந்தை எஸ்.ஆர். பொம்மை முன்னாள் முதல்-மந்திரி ஆவார்.  கடந்த 2008ம் ஆண்டு முதல் பசவராஜ் பொம்மை கட்சியில் பணியாற்றி வருகிறார்.

இதனை தொடர்ந்து, கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக பசவராஜ் பொம்மை நாளை காலை 11 மணிக்கு பதவியேற்று கொள்கிறார்.  அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார்.


Next Story