சொந்தக் கட்சி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு எதிரொலி; சத்தீஷ்கார் சட்டசபையில் சுகாதார மந்திரி வெளிநடப்பு


சொந்தக் கட்சி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு எதிரொலி; சத்தீஷ்கார் சட்டசபையில் சுகாதார மந்திரி வெளிநடப்பு
x
தினத்தந்தி 27 July 2021 6:38 PM GMT (Updated: 27 July 2021 6:38 PM GMT)

சத்தீஷ்கார் மாநிலத்தில் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ராமானுஜ்கஞ்ச் தொகுதி ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வான பிரகஸ்பதி சிங், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வாகன அணிவகுப்பு தாக்கப்பட்டதாகவும், சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தியோவின் உத்தரவின்பேரில் அந்த தாக்குதல் நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையில், சத்தீஷ்கார் சட்டசபையில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது.அப்போது மந்திரி சிங் தியோ மீதான எம்.எல்.ஏ. பிரகஸ்பதி சிங்கின் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சியான பா.ஜ.க. வலியுறுத்தியது.

இந்நிலையில் அதுதொடர்பான ஒரு அறிக்கையை சட்டசபையில் உள்துறை மந்திரி தம்ரத்வாஜ் சாகு வெளியிட்டார்.ஆனால் அதில் திருப்தி அடையாத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் இருவரும் சட்டசபையில் பேசி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரினர். இதற்கிடையில் பொறுமையிழந்த சுகாதாரத் துறை மந்திரி தியோ சிங், இந்த 
விவகாரத்தில் அரசு ஒரு தெளிவான பதிலைக் கொடுக்கட்டும். அதுவரை சட்டசபை நடவடிக்கைகளில் நான் பங்கேற்கப்போவதில்லை என்று கூறி அங்கிருந்து வெளியேறினார்.

பஞ்சாபை தொடர்ந்து சத்தீஷ்கார் மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த உள்கட்சி மோதல், அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story