ஜூலை மாதத்திற்குள் 50 கோடி தடுப்பூசி என்ற இலக்கை அடையவில்லையா? மத்திய அரசு விளக்கம்


ஜூலை மாதத்திற்குள் 50 கோடி தடுப்பூசி என்ற இலக்கை அடையவில்லையா? மத்திய அரசு விளக்கம்
x
தினத்தந்தி 27 July 2021 7:05 PM GMT (Updated: 27 July 2021 7:05 PM GMT)

ஜூலை மாதத்திற்குள் 50 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற இலக்கை இந்தியா அடையவில்லை என வெளியான தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது.

இலக்கை அடையவில்யைா?
நாடு கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை வீழ்த்தப்போராடும் இந்த வேளையில், ஜூலை மாதத்திற்குள் 50 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற இலக்கு அடையப்படவில்லை என்று சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.ஜூலை மாதத்திற்குள் 51.60 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று கடந்த மே மாதம் மத்திய அரசு கூறியதையும் அந்த தகவல்களுடன் சுட்டிக்காட்டி இருந்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

தவறானவை
இதை மறுக்கும் வகையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ள முக்கிய அம்சங்கள்:-

* ஜூலை மாதத்திற்குள் 50 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற இலக்கை இந்தியா அடையவில்லை என வெளியான தகவல்கள் தவறானவை, உண்மைக்கு புறம்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

* ஜனவரி 2021 தொடங்கி ஜூலை 31-ந் தேதி வரையில் 51.60 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டு விடும் என்பது உண்மை.

* முன்கூட்டியே ஒதுக்கீட்டை முடிவு செய்து, அந்த திட்டத்தின்படி தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. இது குறித்து மாநிலங்களுக்கும் முன்கூட்டியே அறிவிக்கப்படுகின்றன. மாதம் முழுவதும் பல்வேறு அட்டவணைகளின்படி தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு வினியோகிக்கப்படுகின்றன.

51.73 கோடி தடுப்பூசிகள்

* இதுவரையில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 45.7 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 6.03 கோடி தடுப்பூசி வரும் 31-ந் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிது. இத்துடன் சேர்த்து 31-ந் தேதி வரையில் மொத்தம் 51.73 கோடி தடுப்பூசிகள் வினியோகிக்கப்பட்டிருக்கும்.

* இதுவரையில் 44.19 கோடி தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது என்பது பாராட்டப்பட வேண்டியதாகும். இது உலகளவில் பெரிய எண்ணிக்கை ஆகும். இதில் 9.6 கோடி பேருக்கு 2 டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டு விட்டன.

* ஜூன் மாதத்தில் 11.97 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்த மாதத்தை பொறுத்தமட்டில் 26-ந் தேதி வரையில் 10.62 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story