மேகதாது திட்டம்: விரைவாக அனுமதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தேன் - பசவராஜ் பொம்மை பேட்டி


மேகதாது திட்டம்: விரைவாக அனுமதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தேன் - பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 31 July 2021 12:38 AM IST (Updated: 31 July 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது திட்டம் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு விரைவாக அனுமதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தேன் என கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

புதுடெல்லி,

கர்நாடக முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா வயது மூப்பு காரணமாக தனது பதவியை கடந்த 26-ந்தேதி ராஜினாமா செய்தார். இதையடுத்து கர்நாடகத்தின் புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை நேற்று முன்தினம் பதவி ஏற்றார். 

எடியூரப்பாவின் தீவிரமான ஆதரவாளரான அவர் நேற்று உத்தரகன்னடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் பிரதமர் நேரம் ஒதுக்கியதும் டெல்லி செல்ல திட்டமிட்டு இருப்பதாக பதவி ஏற்றதும் பசவராஜ் பொம்மை கூறினார். பிரதமரை நேரில் சந்திக்க பசவராஜ் பொம்மைக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.

இந்த நிலையில் பசவராஜ் பொம்மை நேற்று டெல்லி புறப்பட்டுச்சென்றார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து பாஜக தேசிய தலைவர்  ஜே.பி.நட்டா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரை பசவராஜ் பொம்மை நேரில் சந்தித்து பேசினார். 

இந்த சந்திப்புக்கு பிறகு பசவராஜ் பொம்மை நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை நேரில் சந்தித்து பேசினேன். அத்துடன் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களுடனும் ஆலோசனை நடத்தினேன். பிரதமர் உள்பட அனைத்து தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

பிரதமரிடம் கொரோனா பரவலை தடுக்க அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து விவரமாக எடுத்துக் கூறினேன். கொரோனா தடுப்பூசிகளை அதிகமாக ஒதுக்குமாறு கேட்டேன். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் கூறினார். தூய்மையான, ஊழலற்ற நல்லாட்சியை வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார். ஆட்சி நிர்வாகத்தை சுறுசுறுப்பாக நடத்த வேண்டும் என்று கூறினார். நான் 24 மணி நேரமும் பணியாற்ற தயாராக இருப்பதாக உறுதி அளித்தேன்.

ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்திடம், மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு கோரி கடிதம் வழங்கினேன். இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை அரசு ஏற்கனவே மத்திய நீர்வள ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த திட்ட அறிக்கை காவிரி நிர்வாக வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய அரசு கவனம் செலுத்தி விரைவாக அனுமதியை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தேன்.

அத்துடன் கிருஷ்ணா மேலணை திட்டத்தில் நடுவர் மன்ற தீர்ப்பினை அரசிதழில் வெளியிடுமாறு கோரினேன். மேலும் பத்ரா மேலணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்தேன். கலசா-பண்டூரி திட்டத்திலும், நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு கேட்டேன். மத்திய-மாநில அரசுகள் இடையே ஒருங்கிணைப்புடன் செயல்பட அதிகாரிகள் மட்டத்தில் ஒரு குழு அமைக்க முடிவு செய்துள்ளேன். இந்த குழு மத்திய அரசின் திட்டங்களுக்கு விரைவாக ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story