தொகுதிபக்கம் வராத பா.ஜ.க எம்.எல்.ஏவை தெருவில் தேங்கியிருக்கும் கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்!


தொகுதிபக்கம் வராத பா.ஜ.க எம்.எல்.ஏவை தெருவில் தேங்கியிருக்கும் கழிவு நீரில் நடக்க வைத்த மக்கள்!
x
தினத்தந்தி 31 July 2021 5:30 AM GMT (Updated: 31 July 2021 5:30 AM GMT)

உத்தரப்பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏவை தொகுதி மக்கள் கட்டாயப்படுத்தி கழிவு நீரில் நடக்க வைத்ததாக கூறப்படுகிறது.

லக்னோ

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் இப்போதே அதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கிவிட்டனர். 2017 தேர்தலில் வெற்றி பெற்று தொகுதிப் பக்கமே செல்லாத எம்.எல்.ஏக்களும் தங்களின் தொகுதிப் பக்கம் தற்போது செல்லத்துவங்கியுள்ளனர்.

அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தின் மீரட் மாவட்டத்தில் உள்ள கர்முக்தேஸ்வர் தொகுதி பாஜக எம்.எல்.ஏவான கமல் மாலிக் என்பவர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவர் ஹபூரின் நானாய் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றின் வழியாக பாதயாத்திரை சென்றுகொண்டிருந்த போது அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் பகுதியில் தேங்கியிருக்கும் முட்டியளவு கழிவுநீரின் நிலை குறித்து நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் எனக் கூறி எம்.எல்.ஏ கமல் மாலிக்கை நடக்க கழிவு நீரில் கட்டாயப்படுத்தி நடக்க வைத்துள்ளனர்.

இது தொடர்பான சுமார் ஒரு நிமிடம் நீளமுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில் கிராமத்து தலைவரின் கணவரான ரவீந்திர குமார் என்பவர், எம்.எல்.ஏ கமல் மாலிக்குடன் சென்று முட்டி அளவு கழிவு நீர் குறித்த நிலையை எம்.எல்.ஏவுக்கு சுட்டிக்காட்டுகிறார்.

அந்த வீடியோவில் “எம்.எல்.ஏவை தண்ணீரில் இழுத்து வாருங்கள். ஏன் என்றால் எங்கள் எம்.எல்.ஏ இங்கு எந்த வளர்ச்சிப் பணிகளையும் செய்யவில்லை” என்று உள்ளூர்வாசிகள் சிலர் கூறுவதாக அந்த வீடியோவில் உள்ளது.

இந்த வீடியோ தொடர்பாக உள்ளூர்வாசி ஒருவர் கூறுகையில், கடந்த தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி அவர் (எம்.எல்.ஏ) எந்தப் பணியையும் செய்யவில்லை” என கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் செய்தி வெளியாகி உள்ளது.

எனினும் எம்.எல்.ஏவுடன் கழிவுநீரில் நடந்த ரவீந்திர குமாரிடம் கேட்டபோது, “எங்கள் கிராமத்தின் உண்மையான நிலவரத்தை அறிய எம்.எல்.ஏ அவராகவே விரும்பித்தான் கழிவுநீரில் நடந்தார். எனக்கு ஆதரவு தருமாறு எம்.எல்.ஏவிடம் கேட்டேன், அப்போது தான் கிராமவாசிகளிடம் என்னால் பதில் கூற முடியும் என அவரிடம் தெரிவித்தேன் என ரவீந்திர குமார் கூறினார்.

எம்.எல்.ஏ கமல் மாலிக் கூறும்போது

கிராமத்தினரின் கஷ்டத்தை தெரிந்து கொள்ளவே நான் அங்கு சென்று கழிவுநீரில் நடந்தேன். அந்த வீடியோவை தவறான பார்வையில் எடுத்து தவறாக பயன்படுத்தி உள்ளனர். அந்த பகுதியினை சீரமைக்கும் வகையில் இந்த விஷயத்தை உள்ளூர் நிர்வாகத்தினரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன் என தெரிவித்தார்.

Next Story