பெகாசஸ் உளவு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 5-ந்தேதி விசாரணை


பெகாசஸ் உளவு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் வரும் 5-ந்தேதி விசாரணை
x
தினத்தந்தி 1 Aug 2021 9:23 AM GMT (Updated: 1 Aug 2021 9:23 AM GMT)

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை வரும் 5-ந்தேதி நடைபெற உள்ளது.

புதுடெல்லி,

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ உளவுச் செயலியின் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களின் செல்போன்கள் ஒட்டு கேட்ட விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்சனையை எதிர்க்கட்சிகள் கிளப்பி போராட்டம், நாடாளுமன்றத்தில் அமளி போன்ற நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அல்லது ஒய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு  நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மூத்த பத்திரிகையாளர்கள் என்.ராம், சசிகுமார் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில்  பொதுநல மனு தாக்கல் செய்தனர். இதேபோன்று ஏற்கனவே கேரள மாநில எம்.பி. எம்.எல்.சர்மா உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே மனுதாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், இந்த வழக்கு வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சுப்ரீம் கோர்ட் இண்ணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்பு விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

5-ந் தேதி நடக்கும் விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story