பி.வி.சிந்துவிற்கு ஊக்க தொகையாக ரூ.30 லட்சம் வழங்க அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு


பி.வி.சிந்துவிற்கு ஊக்க தொகையாக ரூ.30 லட்சம் வழங்க அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு
x
தினத்தந்தி 3 Aug 2021 5:13 AM IST (Updated: 3 Aug 2021 6:59 AM IST)
t-max-icont-min-icon

பதக்க மேடையில் ஏறியுள்ள தெலுங்கானாவைச் சேர்ந்த சிந்துவுக்கு பாராட்டுகள் குவிகிறது.

அமராவதி,

32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து பதக்கங்களை வாரிகுவிக்கும் நிலையில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை வழக்கம் போல் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கே உள்ளது. போட்டியின் 2-வது நாளில் பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு புகழ் சேர்த்தார். குத்துச்சண்டையில் பெண்களுக்கான 69 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை லவ்லினா அரைஇறுதிக்கு முன்னேறி குறைந்தது வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.இந்த தித்திப்பானவரிசையில் தற்போது இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இணைந்துள்ளார்.

பேட்மிண்டனில் அரைஇறுதியில் தோல்வி அடைந்த இந்திய வீராங்கனையும், உலக சாம்பியனும் தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்து, நேற்று நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் 9-ம் நிலை வீராங்கனை ஹி பிங் ஜியாவை (சீனா) எதிர்கொண்டார்.இதில் ஆக்ரோஷமாக ஆடிய பி.வி.சிந்து தொடக்கம் முதலே மளமளவென புள்ளிகளை திரட்டி முன்னிலை வகித்தார். 10 புள்ளியை கடந்த பிறகு தனது முன்னிலையை வலுப்படுத்திய சிந்து அதன் பிறகு எதிராளியின் கை ஓங்க விடாமல் பார்த்துக்கொண்டார். ஒரு முறை 34 ஷாட்டுகள் இடைவிடாமல் விளாசி பரவசப்படுத்தினர். பந்தை வலைக்கு அருகே லாவகமாக தட்டிவிடுவதில் சற்று தவறிழைத்த சிந்து, அதை அதிரடியான ஷாட்டுகள் மூலம் ஈடுபடுத்திக்கொண்டு முதல் செட்டை வசப்படுத்தினார். அதே உத்வேகத்துடன் 2-வது செட்டிலும் வரிந்துகட்டிய சிந்து, எதிராளியின் பதற்றத்தை சரியாக பயன்படுத்தி இந்த செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.53 நிமிடம் நீடித்தவிறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஹி பிங் ஜியாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை உச்சிமுகர்ந்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையை நிகழ்த்தினார். அவர் ஏற்கனவே 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். பதக்க மேடையில் ஏறியுள்ள தெலுங்கானாவைச் சேர்ந்த சிந்துவுக்கு பாராட்டுகள் குவிகிறது. 

இந்நிலையில் வெண்கலம் பதக்கம் வென்றுள்ள பி.வி.சிந்துவிற்கு  மாநில அரசு சார்பில் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஊக்கபரிசாக ரூ.30 லட்சம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

வெண்கலம் வென்றால் ரூ.50 லட்சம் வழங்கப்படும் என்று தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகரராவ் ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
1 More update

Next Story