ஜார்கண்டில் ஆட்டோவால் மோதி அரங்கேற்றப்பட்ட நீதிபதி கொலை வழக்கில் 17 பேர் கைது; 243 பேரிடம் விசாரணை

ஜார்கண்டில் ஆட்டோவால் மோதி அரங்கேற்றப்பட்ட நீதிபதி கொலை சம்பவத்தில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 243 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நீதிபதி கொலை
ஜார்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் வசித்து வந்த உத்தம் ஆனந்த் என்ற நீதிபதி கடந்த 28-ந்தேதி காலையில் அங்குள்ள ரந்திர் வர்மா சவுக் பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவரது பின்னால் வேகமாக வந்த ஆட்டோ ஒன்று நீதிபதி மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் வேகமாக சென்று விட்டது. இந்த சம்பவத்தில் தூக்கி வீசப்பட்ட நீதிபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது விபத்து இல்லை என்பதும், வேண்டுமென்றே ஆட்டோவால் மோதி நடத்தப்பட்ட கொலை என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க முடிவு
இதைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றையும் மாநில அரசு அமைத்தது.அத்துடன் இந்த கொடூர கொலை குறித்த விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கவும் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் முடிவு செய்துள்ளார்.இதற்கிடையே நீதிபதி கொலை தொடர்பாக விசாரித்து வந்த போலீசார், ஆட்டோ டிரைவர் லகன் வர்மா மற்்றும் ராகுல் வர்மா ஆகியோரை மறுநாளே கைது செய்தனர். மேலும் அந்த ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.
250 ஆட்டோக்கள் பறிமுதல்
அத்துடன் இந்த கொலை தொடர்பாக மாவட்டத்தின் பல பகுதிகளில் போலீசார் விசாரணையும், சோதனையும் நடத்தினர். இதன் பலனாக 17 பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் பல்வேறு போலீஸ் நிலைய பகுதிகளில் இருந்து 243 பேரை போலீசார் பிடித்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர். அது மட்டுமின்றி மாவட்டத்தில் சரியான ஆவணங்கள் இன்றி இயங்கி வந்த 250 ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீஸ் அதிகாரிகள் இடைநீக்கம்
இதற்கிடையே நீதிபதி கொலை சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா பதிவுகளை வெளியிட்ட சப்-இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.மேலும் கொலை நடந்த 2 நாளில் ஆட்டோ ஒன்று திருடு போனதாக வழக்குப்பதிவு செய்த பதார்டி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் உமேஷ் மாஞ்சியும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு நீதிபதி கொலை தொடர்பாக தன்பாத் மாவட்டத்தில் போலீசாரின் அதிரடி நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதுடன், கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணையும் நடந்து வருகிறது.
Related Tags :
Next Story