நாடாளுமன்றத்துக்கு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராகுல்காந்தி தலைமையில் சைக்கிள் பேரணி


நாடாளுமன்றத்துக்கு, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ராகுல்காந்தி தலைமையில் சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 3 Aug 2021 11:56 PM IST (Updated: 3 Aug 2021 11:56 PM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசுக்கு எதிராக கூட்டாக வியூகம் வகுத்து செயல்படுவது குறித்து 15 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை நடத்தினார். பிறகு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் பேரணியாக சென்றனர்.

புதுடெல்லி,

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ‘பெகாசஸ்’ உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கி வருகின்றன. பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், மத்திய அரசு அதை ஏற்கவில்லை. எனவே, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக கைகோர்த்து ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற கருத்து, எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.

இதன் அடுத்தகட்டமாக, எதிர்க்கட்சிகளுடனான மற்றொரு ஆலோசனை கூட்டத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியே அழைப்பு விடுத்தார். அவரது ஏற்பாட்டில், டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் நேற்று காலை உணவுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தியுடன், மல்லிகார்ஜுன கார்கே, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், ஆனந்த் சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மொய்த்ரா (திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய் ராவத், பிரியங்கா சதுர்வேதி (இருவரும் சிவசேனா), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), கனிமொழி (தி.மு.க.), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி), மனோஜ் ஜா (ராஷ்டிரீய ஜனதாதளம்) ஆகியோர் பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய யூனியன் முஸ்லிம்லீக், கேரள காங்கிரஸ் (மாணி), லோக்தந்திரிக் ஜனதாதளம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் என மொத்தம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கும் ராகுல்காந்தி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அக்கட்சிகள் பங்கேற்கவில்லை.

இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை ராகுல்காந்தி வலியுறுத்தினார். அவர் பேசியதாவது:-

உங்களை அழைத்ததற்கான ஒரே நோக்கம், ஒற்றுமைதான். இந்த குரல் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறதோ, எவ்வளவு வலிமை ஆகிறதோ, அந்த அளவுக்கு இந்த குரலை நசுக்குவது பா.ஜனதாவுக்கும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் கடினமானதாக இருக்கும்.

இந்த ஒற்றுமையின் அடித்தளத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த அடித்தளத்துடன் நமது பயணத்தை தொடங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில், ‘‘நாம் சொல்வதை அரசு கேட்க மறுக்கிறது. ஆகவே, நாம் ஒன்று கூடியிருக்கிறோம். இது, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான அடையாளம்’’ என்றார். இந்த ஒற்றுமை, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்று ராஜீவ் சுக்லா கூறினார்.

கூட்டத்தில் பேசிய தலைவர்கள், ஒற்றுமையாக இருப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். நாடாளுமன்றத்தில் கூட்டாக செயல்படுவது குறித்து வியூகம் வகுக்கப்பட்டது.

கூட்டம் முடிவடைந்த பின்னர், அங்கிருந்து நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில், இம்முடிவு எடுக்கப்பட்டது.

அப்போது பேசிய ராகுல்காந்தி, ‘‘எரிபொருள் விலை உயர்வால் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் சைக்கிளில் சென்றால், அது தாக்கத்தை ஏற்படுத்தும்’’ என்று கூறினார்.

பின்னர், ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் நாடாளுமன்றத்துக்கு சைக்கிளில் பேரணியாக சென்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பதாகைகளையும் அவர்கள் கையில் பிடித்திருந்தனர்.

சைக்கிள் ஓட்ட இயலாத எம்.பி.க்கள், நாடாளுமன்றத்துக்கு நடந்து சென்றனர்.

Next Story