கோவிஷீ்ல்டு, கோவேக்சின் உற்பத்தி அதிகரிக்கும்; இந்தியாவில் மேலும் 4 நிறுவனங்கள் அக்டோபரில் தடுப்பூசி உற்பத்தி


கோவிஷீ்ல்டு, கோவேக்சின் உற்பத்தி அதிகரிக்கும்; இந்தியாவில் மேலும் 4 நிறுவனங்கள் அக்டோபரில் தடுப்பூசி உற்பத்தி
x
தினத்தந்தி 3 Aug 2021 7:40 PM GMT (Updated: 2021-08-04T01:10:37+05:30)

இந்தியாவில் மேலும் 4 மருந்து நிறுவனங்கள் அக்டோபர், நவம்பரில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கும் என்றும், கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும் என்றும் மாநிலங்களவையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று பல்வேறு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பதில் அளித்து கூறியதாவது:-

இந்தியாவில் தற்போது 47 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த நாட்டுக்கும் கூடிய விரைவில் தடுப்பூசி போட்டு முடிக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

நாட்டில் கொரோனா தடுப்பூசி போடும் பணி சுமுகமாக நடக்கிறது. இந்தியாவில் மேலும் 4 மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபட உள்ளன. இதனால் தடுப்பூசி போடுவது வரும் நாட்களில் மேலும் துரிதப்படுத்தப்படும்.

அக்டோபர், நவம்பரில் இந்த நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கி விடும். இதனால் உள்நாட்டு தேவைகளை சந்திக்க உதவியாக இருக்கும்.

பயாலஜிக்கல்-இ மற்றும் நோவார்ட்டிஸ் தடுப்பூசிகள் வரும் நாட்களில் சந்தைக்கு வந்துவிடும். ஜைடஸ் கேடிலா நிறுவன தடுப்பூசிக்கு விரைவில் நிபுணர் குழு ஒப்புதல் கிடைக்கும்.

தற்போது பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் ஆகியவை அரசுக்கு தடுப்பூசிகளை வினியோகிக்கின்றன. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் கிடைத்து வருகிறது. இதன் உற்பத்தியும் தொடங்கி விட்டது.

தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு தடுப்பூசி வினியோகத்தை குறைக்க திட்டம் உள்ளதா என்றால், இது தேவையில்லை. ஏனென்றால் அங்கும் பயன்படுத்தப்படாத தடுப்பூசிகள் 7-9 சதவீத அளவில் இருந்தாலும் அவை அரசு தடுப்பூசி முகாம்களில் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தனியார் ஆஸ்பத்திரிக்கான தடுப்பூசி வினியோகத்தை குறைக்கத் தேவையில்லை.

கோவிஷீல்டு தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி திறன் 12 கோடி டோசுக்கு அதிகமாகவும், கோவேக்சின் தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி திறன் 5 கோடியே 80 லட்சம் டோசுக்கு அதிகமாகவும் டிசம்பர் மாதத்துக்குள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

* மற்றொரு கேள்விக்கு சுகாதார ராஜாங்க மந்திரி பாரதி பிரவிண் பவார் எழுத்து மூலம் பதில் அளிக்கையில், “கொரோனா தடுப்பூசிகள் சமீபத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளன. எனவே இருவேறு தடுப்பூசிகளை கலந்து போடுவது பற்றி அறிவியல் சான்றுகள் இப்போதுதான் உருவாகி வருகின்றன. எனவே முதல் டோஸ் ஒரு தடுப்பூசியையும், இரண்டாவது டோஸ் மற்றொரு தடுப்பூசியையும் போடுவதற்கு தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவும், தடுப்பூசிக்கான தேசிய நிபுணர் குழுவும் எந்த பரிந்துரையையும் செய்யவில்லை. உலக சுகாதார அமைப்பும் இதில் பரிந்துரை எதையும் வழங்கவில்லை” என கூறி உள்ளார்.

Next Story