கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை: தமிழகம் உள்ளிட்ட 11 மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்

கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழகம் உள்ளிட்ட 11 மாநில அரசுகளுக்கும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த ஸ்வபிமானி பக்ஷா கட்சியின் முன்னாள் எம்.பி. ராஜு அன்னா ஷெட்டி மற்றும் கடந்த 2015-ம் ஆண்டு முதல் நிலுவைத்தொகையை பெறாத கரும்பு விவசாயிகள் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், நிலுவைத்தொகையை தவிர்க்க கரும்புக்கான தொகையை அளிக்க முறையான ஏற்பாட்டை உருவாக்க வேண்டும். நிலுவைத்தொகையை அளிக்காத சர்க்கரை ஆலைகள் மீது கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தொகையை அளிக்கத் தவறும் ஆலைகள் மீது, கரும்பு கட்டுப்பாடு சட்டத்தை மீறிதற்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ஆனந்த் குரோவர் ஆஜராகி, அலகாபாத் ஐகோர்ட்டு உத்தரவின்படி, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை 14 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை சர்க்கரை ஆலைகள் தருவதில்லை. அந்த நிலுவைத்தொகையை வேறு சிலவற்றுக்கு செலவிட்டு வருகின்றன. எனவே, ஆலையில் இருப்பு வைத்துள்ள சர்க்கரையை முடக்கி, விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை அளிக்க வேண்டும் என வாதிட்டார்.
வாதங்களைப் பரிசீலித்த நீதிபதிகள், இந்த ரிட் மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில அரசுகளுக்கும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 3 வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ராஜு அன்னா ஷெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத்தொகையை அந்தந்த மாநில அரசுகளின் சட்டப்படி ஆலைகளிடம் இருந்து பெற்றுத்தரும் கடமையில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி கண்டுள்ளன. இது கரும்பு விவசாயிகளின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story