டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் ராகுல்காந்தி சந்திப்பு - நீதி கிடைக்க பாடுபடுவதாக உறுதி


டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோருடன் ராகுல்காந்தி சந்திப்பு - நீதி கிடைக்க பாடுபடுவதாக உறுதி
x
தினத்தந்தி 5 Aug 2021 6:24 AM IST (Updated: 5 Aug 2021 6:24 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட தலித் சிறுமியின் பெற்றோரை ராகுல்காந்தி சந்தித்தார். அவர்களுக்கு நீதி கிடைக்க துணை இருப்பதாக உறுதி அளித்தார்.

புதுடெல்லி,

டெல்லியின் தென்மேற்கு பகுதியில் நாங்கல் என்ற கிராமம் உள்ளது. அங்கு பெற்றோருடன் வசித்து வந்த 9 வயதான தலித் சிறுமி, கடந்த 1-ந் தேதி மாலை, தனது வீட்டு அருகே உள்ள சுடுகாட்டுக்கு சென்றாள். அங்குள்ள தண்ணீர் குளிரூட்டும் சாதனத்தில் இருந்து குளிர்ந்த நீர் பிடிப்பதற்காக சென்றாள்.

சற்று நேரத்தில், சுடுகாட்டு ஊழியரான ராதே ஷ்யாம் என்பவர், அச்சிறுமியின் வீட்டுக்கு சென்றார். குளிரூட்டும் சாதனத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து சிறுமி இறந்து விட்டதாக கூறினார்.

அதைக்கேட்டு அலறியடித்துக் கொண்டு, சிறுமியின் தாயார் அங்கு சென்றார். சிறுமியின் உடலில் காயங்கள் காணப்பட்டன. சில உடல்பகுதிகள் நீலமாக இருந்தன.

சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்ய நினைத்தபோது, அதனால் பிரச்சினைகள் வரும் என்று சுடுகாட்டு ஊழியர்கள் தடுத்து விட்டனர். தாயாரின் எதிர்ப்பையும் மீறி, சிறுமியின் உடலை தகனம் செய்தனர்.

உடனே அப்பெண் கத்தி கூச்சலிட்டார். சுமார் 200 பேர் அங்கு திரண்டு விட்டனர். தகவல் அறிந்து போலீசார் வந்தனர். தங்கள் மகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். அதன்பேரில், கற்பழிப்பு, கொலை வழக்குகளில் சுடுகாட்டு ஊழியர் ராதே ஷ்யாம் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் அரசியல்ரீதியாக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நேற்று நாங்கல் கிராமத்துக்கு நேரில் சென்றார். கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரை சந்தித்தார். அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சிறுமியின் குடும்பத்தினர் தங்களுக்கு நீதி வேண்டும் என்று கேட்டனர். தங்களுக்கு யாருமே உதவவில்லை என்று கூறினர். நாங்கள் உதவுவோம். அவர்களுக்கு நீதி கிடைக்கும்வரை இந்த ராகுல்காந்தி உடன் இருப்பான் என்று அவர்களிடம் உறுதி அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் சிறுமியின் ெபற்றோரை சந்தித்தார். அப்போது, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கக்கோரி உள்ளூர் மக்களுடன் சேர்ந்து சிறுமியின் பெற்றோர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

அரவிந்த் கெஜ்ரிவாலை முற்றுகையிட்டு அவருக்கு எதிராக ஊர்மக்கள் கோஷம் எழுப்பினர். அவர்களிடம், திறமையான வக்கீலை நியமித்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தருவதாக உறுதி அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், ‘‘சிறுமி கொலை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிடுவோம். அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும்’’ என்று கூறினார்.

டெல்லி பெண்கள் ஆணையமும் விசாரணையை தொடங்கி இருக்கிறது. இன்று (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகுமாறு டெல்லி போலீஸ் துணை கமிஷனருக்கு ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.

Next Story