பெகாசஸ் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் நாடாளுமன்ற முடக்கத்துக்கு மத்திய அரசே காரணம்

நாடாளுமன்ற முடக்கத்துக்கு மத்திய அரசே காரணம் எனவும், பெகாசஸ், விவசாயிகள் பிரச்சினை போன்றவை தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் எனவும் 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
புதுடெல்லி,
பெகாசஸ் மென்பொருள் மூலம் எதிர்க்கட்சித்தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்களின் செல்போன்களை ஒட்டுகேட்க இலக்கு வைக்கப்பட்டிருந்த விவகாரம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை வெகுவாக பாதித்து வருகிறது.
இந்த பிரச்சினையில் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் எழுப்பி வருவதால் மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்தே அலுவல்கள் அனைத்தும் பாதித்து வருகின்றன.
ஆனால் இந்த விவகாரத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி விளக்கம் அளித்திருப்பதாக கூறி வரும் அரசு, எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்துக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது. இதைப்போல பிரதமர் மோடியும் எதிர்க்கட்சிகளை குறை கூறியுள்ளார்.
எனினும் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருக்கும் எதிர்க்கட்சிகள், பெகாசஸ், வேளாண் சட்டங்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளில் ஓரணியில் நிற்க முடிவு செய்துள்ளன.
அதன் ஒரு பகுதியாக, 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டு உள்ளனர். அதில் ஓரணியில் நிற்கும் எதிர்க்கட்சிகளை கேவலப்படுத்த தவறான பிரசாரத்தை அரசு கட்டவிழ்த்து விட்டு உள்ளதாக அதில் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக தங்கள் அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற அலுவல்களில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டைக்கான பொறுப்பு அரசிடமே இருக்கிறது. பெகாசஸ் விவகாரத்தில் இரு அவைகளிலும் விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்காமல் பிடிவாதமாகவும், ஆணவத்துடனும் உள்ளது.
இந்த விவகாரத்தில் விவாதம் நடத்தும் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
பெகாசஸ் பிரச்சினை தேசிய பாதுகாப்பு சார்தது என்பதால், உள்துறை மந்திரி பதிலளிக்கும் வகையில் இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் எதிர்க்கட்சிகள் உறுதியாகவும், ஒற்றுமையாகவும் உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதைப்போல வேளாண் சட்டங்கள் மற்றும் விலைவாசி ஏற்றம் போன்ற பிரச்சினைகளையும் தங்கள் அறிக்கையில் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இந்த அறிக்கையில் 14 கட்சிகளை சேர்ந்த 18 தலைவர்கள் கையெழுத்து போட்டிருந்தனர்.
அந்தவகையில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆனந்த் சா்மா (காங்கிரஸ்), சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்), டி.ஆர்.பாலு, திருச்சி சிவா (தி.மு.க.), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாடி), டெரிக் ஓ பிரையன், கல்யாண் பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), சஞ்சய் ராவத், விநாயக் ராவத் (சிவசேனா) ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் மனோஜ் ஜா (ராஷ்ட்ரீய ஜனதாதளம்), இளமாறன் கரீம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), பினோய் விஸ்வம் (இந்திய கம்யூனிஸ்டு), சுசில் குப்தா (ஆம் ஆத்மி), முகமது பஷீர் (முஸ்லிம் லீக்), ஹஸ்னைன் மசூடி (தேசிய மாநாடு), பிரேமச்சந்திரன் (புரட்சிகர சோசலிஸ்டு), ஷ்ரேயாம்ஸ் குமார் (லோக்தந்திரிக் ஜனதாதளம்) ஆகியோரும் அறிக்கையில் கையெழுத்து போட்டுள்ளனர்.
Related Tags :
Next Story