ராமர்கோவிலுக்கு பூமிபூஜை போட்டு ஓராண்டு நிறைவு - சிறப்பு நிகழ்ச்சியில் உ.பி. முதல்-மந்திரி பங்கேற்றார்


ராமர்கோவிலுக்கு பூமிபூஜை போட்டு ஓராண்டு நிறைவு - சிறப்பு நிகழ்ச்சியில் உ.பி. முதல்-மந்திரி பங்கேற்றார்
x
தினத்தந்தி 6 Aug 2021 5:52 AM IST (Updated: 6 Aug 2021 5:52 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை போட்டு ஓராண்டு நிறைவு அடைந்தது. இதையொட்டி நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.

அயோத்தி,

உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது இந்துக்களின் கனவு ஆகும். இது நனவாகிறது. அங்கு பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்படுகிறது.

இந்த கோவிலுக்கான பூமி பூஜை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 5-ந் தேதி நடந்தது. அப்போது பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, வெள்ளி செங்கல்களை எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டினார். இந்த பூமி பூஜை நடந்து ஓராண்டு முடிந்துள்ளது.

இதையொட்டி அங்கு நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அயோத்திக்கு வந்தார்.

அவர் யாத்ரி நிவாஸ் மாளிகைக்கு வந்து, அந்த நகரில் நடைபெற்று வருகிற பல்வேறு வளர்ச்சிப்பணிகள் குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர் ராம ஜென்மபூமி வளாகத்துக்கு வந்தார். அங்கு நடைபெற்ற ஆரத்தி வழிபாட்டில் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்தார்.

அதைத் தொடர்ந்து மத்திய அரசின் ‘காரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின்கீழ் 400 பயனாளிகளுக்கு உணவு தானியங்களை அவர் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து ராமஜென்ம பூமியின் தலைமை அர்ச்சகர் ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் கூறும்போது, “ராம் லல்லாவுக்கு (குழந்தை ராமருக்கு) மஞ்சள் நிற பட்டாடை வழங்கப்பட்டது. இத்துடன் ராமதால் அமைப்பின் தலைவர் பண்டிட் கல்கிராம் வழங்கிய ராம்சாரிட் மனாஸ் இதிகாசத்தின் நகல்களும் அளிக்கப்பட்டன. இவை விருந்தினர்களுக்கு வினியோகிக்கப்பட்டன” என குறிப்பிட்டார்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி குறித்து டெல்லியில் விஷ்வ இந்து பரிஷத் தேசிய பொதுச்செயலாளர் வினோத் பன்சால் கூறியதாவது:-

ராமர் கோவில் கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அக்டோபர் மாதம் அஸ்திவாரப்பணிகள் முடிந்துவிடும். இது சவாலான பணி ஆகும். ராமர்கோவிலுக்காக சேகரிக்கப்பட்ட செங்கல்கள் முக்கிய கட்டமைப்புக்கு பயன்படுத்தப்படாது. ஆனால் வளாகத்தில் மரியாதைக்குரிய இடம் அளிக்கப்படும். கோவில் கருவறைர். 2023-க்குள் தயாராகி விடும். அதன்பின்னர் வழிபாடு தொடங்கி விடும். கோவில் பணிகள் 2025-ல் முழுமையாக முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story