இந்திய மகளிர் ஆக்கி அணியின் ஜார்கண்ட் வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு - முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் அறிவிப்பு

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மகளிர் ஆக்கி அணி வீராங்கனைகளுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.
ராஞ்சி,
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் மகளிர் ஆக்கி வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்திய அணி இறுதிவரை போராடி இங்கிலாந்து அணியிடம் 4-3 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
இந்தியா 3 கோல்கள் அடித்த நிலையில், இங்கிலாந்து 4 கோல் அடித்து வெண்கலப் பதக்கம் வென்றது. இப்போட்டியில் முதல் பாதியில் இந்தியா முன்னிலை பெற்று வந்த நிலையில், இரண்டாம் பாதியில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. இருப்பினும் அரை இறுதி வரை முன்னேறிய இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு இந்திய ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டோக்கியோ ஒலிம்பிக்கில் விளையாடிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மகளிர் ஆக்கி அணி வீராங்கனைகளுக்கு, மாநில அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் அந்த விராங்கனைகளின் பழைய வீடுகளை புணரமைத்து, நவீன வடிவமைப்புகளுடன் புதிய வீடுகளாக கட்டித் தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் ஆக்கி அணி ஒலிம்பிக்கில் பதக்கத்தை தவற விட்டிருந்தாலும், அவர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களை பலம் வாய்ந்த அணியாக நிரூபித்துள்ளதாக ஹேமந்த சோரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story