அமெரிக்க நிறுவனத்தின் ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி, இந்தியாவுக்கு வருகிறது - அவசர பயன்பாட்டு அனுமதிக்கு விண்ணப்பம்


அமெரிக்க நிறுவனத்தின் ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி, இந்தியாவுக்கு வருகிறது - அவசர பயன்பாட்டு அனுமதிக்கு விண்ணப்பம்
x
தினத்தந்தி 7 Aug 2021 12:26 AM GMT (Updated: 7 Aug 2021 12:26 AM GMT)

கொரோனாவுக்கு எதிராக, அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தாரின் ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி இந்தியாவுக்கு வருகிறது. இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டு அனுமதிக்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் தற்போது கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள்தான் மத்திய அரசின் தடுப்பூசி திட்டத்தின்கீழ் பயன்பாட்டில் உள்ளது. இந்த தடுப்பூசிகள் இரண்டுமே 2 ‘டோஸ்’ தடுப்பூசிகள்தான். ஒரு ‘டோஸ்’ போட்ட பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளியில் இரண்டாவது ‘டோஸ்’ போட வேண்டும்.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த உலகளாவிய சுகாதார, மருந்து நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன், ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசியை உருவாக்கி உள்ளது.

இதன் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில், சோதனை நடத்தப்பட்ட எல்லா இடங்களிலும் கடுமையான நோய்த்தொற்றை தடுப்பதில் 85 சதவீத செயல்திறனைக் காட்டியது. மேலும் தடுப்பூசியை போட்டுக்கொண்ட 28 நாட்களுக்கு பிறகு கொரோனா தொடர்பாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதற்கும், மரணம் அடைவதற்கும் எதிராக பாதுகாப்பை காட்டி உள்ளது.

இந்த ஒற்றை டோஸ் தடுப்பூசி இந்தியாவுக்கு வர உள்ளது. இதன் அவசர கால பயன்பாட்டுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார், ஐதராபாத்தைச் சேர்ந்த ‘பயாலஜிக்கல் இ’ நிறுவனத்தாருடன் கரம் கோர்க்கின்றனர். இந்த நிறுவனம்தான் இந்தியாவில் வினியோகத்தை கவனிக்கும்.

இதையொட்டி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆகஸ்டு 5-ந் தேதியன்று, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார், தங்களது ஒற்றை டோஸ் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளனர்.

இந்திய மக்களுக்கும், எஞ்சிய உலக நாடுகளுக்கும், பயாலஜிக்கல் இ நிறுவனத்தாருடன் சேர்ந்து இந்த நிறுவனத்தின் ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசியைக்கொண்டு வருவதில் இது ஒரு முக்கிய மைல் கல் ஆகும்.

பயாலஜிக்கல் இ நிறுவனம், எங்களது உலகளாவிய வினியோக சங்கிலியில் முக்கிய அங்கம் வகிக்கும்; அரசாங்கங்கள், காவி, கோவேக்ஸ் அமைப்புகளுடனும் ஒருங்கிணைந்து செயல்படவும், தடுப்பூசியை வினியோகிக்கவும் உதவியாகத் திகழும்.

கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டுவருவதில், எங்கள் தடுப்பூசியை துரிதமாக கிடைக்கச்செய்வதில் நாங்கள் இந்திய அரசுடனான எங்கள் பேச்சுவார்த்தையை முடிக்க காத்திருக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒற்றை ‘டோஸ்’ தடுப்பூசி பயன்பாட்டில் வருகிற போது, இன்னும் அதிகமான மக்களை, விரைவாக கொரோனாவுக்கு எதிராக பாதுகாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story