மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி - உத்தவ் தாக்கரே அறிவிப்பு


படம்:  ANI
x
படம்: ANI
தினத்தந்தி 9 Aug 2021 7:42 AM IST (Updated: 9 Aug 2021 7:42 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 19 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். எனவே முதல் கட்டமாக மின்சார ரெயில்களில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

மும்பை

கொரோனா 2-வது அலை உச்சம் தொட்டதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் மின்சார ரெயில்களில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. அத்தியாவசிய, சுகாதார மற்றும் அரசு ஊழியர்கள் மட்டுமே மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதன் காரணமாக பொதுமக்கள் அலுவலகம், வேலைக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களை மின்சார ரெயில்களில் அனுமதிக்க வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மிலிந்த் தியோரா மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மற்ற கட்சிகள், பல்வேறு தரப்பினரும் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் மின்சார ரெயில்களில் பொதுமக்களை பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பா.ஜனதா கட்சி மும்பை, தானேயில் போராட்டம் நடத்தியது.

இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று இரவு சமூகவலைதளம் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், மும்பையில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

இதுவரை மும்பையில் 19 லட்சம் பேர் 2 டோஸ் தடுப்பூசி போட்டு உள்ளனர். எனவே முதல் கட்டமாக மின்சார ரெயில்களில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. 2-வது டோஸ் தடுப்பூசி போட்டு 14 நாட்கள் முடிந்தவர்கள் வருகிற 15-ந் தேதி முதல் மின்சார ரெயில்களில் பயணம் செய்யலாம். 

தடுப்பூசி போட்டவர்கள் மின்சார ரெயிலில் பயணம் செய்ய ஆன்லைனில் டிக்கெட் பெற செல்போன் செயலி உள்ளது. பொதுமக்கள் தடுப்பூசி போட்ட விவரங்களை கொடுத்து அதில் டிக்கெட், மாத பாசை பெறலாம். ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் நேரடியாகவும் டிக்கெட், பாஸ் பெறலாம். பொதுமக்கள் வார்டு ஆபிஸ், புறநகர் ரெயில்நிலையங்களிலும் டிக்கெட் பெறலாம். பாஸ்களின் உண்மை தன்மையை கண்டறிய க்யுஆர் கோடு வழங்கப்படும்.

இதேபோல வணிக வளாகங்கள், கடைகள், ஓட்டல், உணவகங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிப்பது மற்றும் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதிப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான முடிவு கொரோனா பணிக்குழுவுடன் திங்கட்கிழமை (இன்று) நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும்.

இதேபோல கடந்த ஜூலை மாதம் மும்பையில் விக்ரோலி, செம்பூர் பகுதிகள் நிலச்சரிவாலும் ராய்காட், ரத்னகிரி, சாங்கிலி, கோலாப்பூர் ஆகிய பகுதிகள் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்டது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய 4 லட்சத்து 37 ஆயிரத்து 731 பேர் மீட்கப்பட்டனர். 47 ஆயிரத்து 214 பேர் 349 முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். வெள்ள சேதத்தை ஆய்வு செய்தபிறகு, உடனடி மற்றும் நீண்டகால மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக 11 ஆயிரத்து 500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
1 More update

Next Story