50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை - உத்தவ் தாக்கரே வலியுறுத்தல்

50 சதவீத இட ஒதுக்கீட்டு உச்சவரம்பை உயர்த்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
மராத்தா சமுதாயத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கி 2018-ம் ஆண்டு மராட்டிய அரசு சட்டம் நிறைவேற்றியது. அந்த மாநிலங்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு இருப்பதை சுட்டிக்காட்டி சுப்ரீம் கோர்ட்டு இந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்தது.
இதையடுத்து மராத்தா சமுதாயத்தினர் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மீண்டும் போராட தொடங்கி உள்ளனர்.
இந்தநிலையில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "பல்வேறு சமுதாயங்களுக்கு இட ஒதுக்கீட்டை வழங்க மாநில அரசுக்கு உரிமை வழங்குவதுடன், இடஒதுக்கீட்டின் மீதான 50 சதவீத உச்ச வரம்பை தளர்த்துவதற்கான தீர்மானத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக நேரடி ஒளிபரப்பு மூலம் மாநில மக்களுடன் உரையாற்றிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் கடந்த ஜூன் மாதம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது, சுப்ரீம் கோர்ட்டு மராட்டிய இடஒதுக்கீட்டை ரத்து செய்து மாநிலங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உரிமை இல்லை என்று தீர்பளித்ததால், மத்திய அரசு 50 சதவீத இடஒதுக்கீட்டு உச்சவரம்பை தளர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன்.
இப்போது மத்திய அரசு மாநிலங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தயாரிக்க உரிமை அளித்துள்ளது. இதேபோல 50 சதவீத உச்சவரம்பையும் தளர்த்தவேண்டும்.
உச்சவரம்பை தளர்த்தாமல் மாநிலங்கள் தங்கள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை தயாரிக்க அனுமதிப்பது மற்றும் இடஒதுக்கீடு வழங்குவது உதவாது. பிரதமர் அவ்வாறு செய்வார் என்று நான் நம்புகிறேன்.
வெள்ளம், புயல் மற்றும் நிலச்சரிவுகளுக்கு நிரந்தர தீர்வுகாண அரசு உறுதி பூண்டுள்ளது. இவை உயிர் மற்றும் சொத்துகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் நிரந்தர அம்சமாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story