மராட்டிய அரசின் தலைமை செயலகத்தில் காலி மதுபாட்டில்கள் விசாரணைக்கு உத்தரவு

மராட்டிய அரசின் தலைமை செயலகத்தில் காலி மதுபாட்டில்கள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை,
மராட்டிய அரசின் மந்திராலயா (தலைமை செயலகம்) கட்டிடம் தென்மும்பையில் உள்ளது. இங்கு தான் முதல்-மந்திரி, மந்திரிகள் மற்றும் அனைத்து துறைகளின் அலுவலகங்களும் உள்ளன. அரசு வழங்கிய பாஸ் உள்ளவர்கள் மட்டுமே இந்த கட்டிடத்திற்குள் நுழைய முடியும். மேலும் எப்போதும் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பதால், யாரும் மந்திராலயாவிற்குள் அவ்வளவு எளிதில் நுழைந்துவிட முடியாது.
இந்தநிலையில் மந்திராலயா கட்டிடத்தில் காலி மதுபாட்டில்கள் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கட்டிடத்தின் தரை தளத்தில் உணவகம் ஒன்று உள்ளது. அதற்கு செல்வதற்காக உள்ள படிக்கட்டின் அடிப்பகுதியில் காலி மதுபாட்டில்கள் கிடந்து உள்ளன. இதன் காரணமாக மந்திராலயாவின் பாதுகாப்பில் கேள்விகள் எழுந்து உள்ளன.
இந்தநிலையில் இந்த விவகாரம் குறித்து பொதுநிர்வாகத்துறை இணை மந்திரி தத்தாரே பாரனே கூறுகையில், ‘‘மந்திராலயா வளாகத்தில் பல பணிகள் நடந்து வருகிறது. எனவே தனியார் ஒப்பந்ததாரர்களின் தொழிலாளர்கள் அந்த மது பாட்டில்களை கொண்டு வந்து இருக்கலாம் என நினைக்கிறேன். தலைமை செயலகத்தில் மதுபாட்டில்கள் கிடந்தது குறித்து உள்துறை மந்திரி திலிப் வால்சே பாட்டீலிடம் தகவல் தெரிவிக்க உள்ளேன். இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
இந்தநிலையில் மந்திராலயாவில் மதுபாட்டில்கள் கிடந்த சம்பவத்திற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தொிவித்து உள்ளது. இதுகுறித்து பா.ஜனதா செய்தி தொடர்பாளர் கேசவ் உபாதய் கூறுகையில், ‘‘இந்த அரசுக்கு மதுபான தொழில் மீது கரிசனம் உள்ளது. மந்திராலயாவில் காலி மதுபாட்டில்கள் கிடந்தது வெட்ககேடானது. ஊரடங்கின் போதும் கூட, மற்ற தளர்வுகளை அறிவிக்கும் முன் மதுக்கடைகளை இந்த அரசு திறந்தது’’ என்றார்.
Related Tags :
Next Story