ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற லவ்லினா போர்ஹோகெய்னுக்கு டிஎஸ்பி பதவி - அசாம் அரசு அறிவிப்பு


ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற லவ்லினா போர்ஹோகெய்னுக்கு டிஎஸ்பி பதவி - அசாம் அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2021 3:06 PM GMT (Updated: 12 Aug 2021 3:06 PM GMT)

டோக்கியோ ஒலிம்பிக்கில் குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற லவ்லினாவிற்கு அசாம் மாநில முதல்-மந்திரி டிஎஸ்பி பதவி வழங்கி கவுரவித்துள்ளார்.

கவுகாத்தி,

டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை 69 கிலோ எடைப்பிரிவின் போட்டியில் இந்திய வீராங்கனை லவ்லினா வெண்கலப் பதக்கத்தை வெற்றிகொண்டார். இதனால் இவருக்கு பரிசுத்தொகை குவிந்து வருகிறது. 

இந்நிலையில்  அசாம் மாநிலம் கோலாகாட் மாவட்டத்தில் உள்ள பாராமுகியா என்ற கிராமத்தை சேர்ந்த லவ்லினாவிற்கு அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சர்மா ரூ.1 கோடி பரிசுத்தொகையும், மாநில காவல்துறையில் டிஎஸ்பி பதவியையும் வழங்கியுள்ளார். 

மேலும்  அசாம் மாநில முதல்-மந்திரி,  ஒலிம்பிக் வீராங்கனை லவ்லினாவிற்கு அறிவித்துள்ள பரிசுகள் பின்வருமாறு:-

அசாமில் முதன் முறையாக ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுத்த லவ்லினாவிற்கு 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு தங்கம் வெல்வதை கனவாக கொண்டுள்ளார். இதனால் அதுவரை இவருக்கு மாதந்தோறும் ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும். 

மேலும், குவாஹட்டியில் உள்ள ஒரு சாலைக்கு லவ்லினாவின் பெயர் சூட்டப்படும். இதனை அடுத்து, லவ்லினா பதக்கம் வெல்ல காரணமாக இருந்த இவரது பயிற்சியாளர்களான பிரஷந்தா தாஸ், பதும் பரௌவா, சந்தியா குருங், ரஃபேல் கமவஸ்கா ஆகியோருக்கு அசாம் சார்பாக ரூ.10 லட்சம் வழங்கி அவர்கள் கௌரவிக்கப்படுவார்கள். லவ்லினா வசிக்கும் கிராமத்தில் குத்துச்சண்டை அகாடமி வசதியோடு விளையாட்டு வளாகம் அமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story