மங்களூருவில் என்.ஐ.ஏ. அலுவலகம் அமைக்கப்படுமா? பசவராஜ் பொம்மை பதில்


மங்களூருவில் என்.ஐ.ஏ. அலுவலகம் அமைக்கப்படுமா? பசவராஜ் பொம்மை பதில்
x
தினத்தந்தி 13 Aug 2021 5:49 PM GMT (Updated: 2021-08-13T23:19:35+05:30)

மங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அலுவலகம் அமைக்கப்படுமா என்பதற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பதில் அளித்து உள்ளார்.

2 நாட்கள் சுற்றுப்பயணம்
2 நாட்கள் சுற்றுப்பயணமாக தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களுக்கு முன்தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சென்றார். முதலில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பசவராஜ் பொம்மை, மங்களூரு வென்லாக் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார். பின்னர் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுப்பது பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதையடுத்து உடுப்பிக்கு சென்ற அவர் அங்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் உடுப்பியில் இருந்து மங்களூருவுக்கு வந்த அவர் ஒரு ஓட்டலில் தங்கினார்.

போலீஸ் மந்திரி ஆலோசனை
இந்த நிலையில் காலை அவர் மங்களூருவில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு திரும்பி வந்தார். மங்களூருவில் இருந்து புறப்படும் முன்பு பசவராஜ் பொம்மையிடம் மங்களூரு உல்லால் பகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. மகன் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்தும், மங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் அமைக்கப்படுமா என்றும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு அவர் பதில் அளிக்கும்போது கூறியதாவது:-
மங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் அமைப்பது குறித்து, கர்நாடக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா மங்களூருவுக்கு வந்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவார். பெங்களூருவில் வைத்தும் அரக ஞானேந்திரா 2 முறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். அவர் வழங்கும் தகவலை வைத்து மங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை அலுவலகம் அமைப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்திரா உணவகங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்று சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். அது அவரது தனிப்பட்ட கருத்து. இந்திரா உணவகங்கள் பெயரை மாற்றுவது குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. மந்திரிசபை விரிவாக்கம், மந்திரிகளுக்கு இலாகா ஒதுக்கீடு செய்ததில் எந்த குழப்பமும் இல்லை. மந்திரி ஆனந்த்சிங் விவகாரம் குறித்து கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story