விமான கட்டணம் உயர்வு; மத்திய அரசு நடவடிக்கை


விமான கட்டணம் உயர்வு; மத்திய அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2021 6:18 PM GMT (Updated: 2021-08-13T23:48:06+05:30)

உள்நாட்டு விமான கட்டணங்களை 12.82 சதவீதம்வரை மத்திய அரசு உயர்த்தியது.

கட்டண உயர்வு
கடந்த ஆண்டு மே 25-ந் தேதி, 2 மாத ஊரடங்குக்கு பிறகு உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. அப்போது, பயண நேரத்தின் அடிப்படையில், உள்நாட்டு விமானங்களில் குறைந்தபட்ச கட்டணத்துக்கும், அதிகபட்ச கட்டணத்துக்கும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. விமான நிறுவனங்களின் பொருளாதார நிலையை உயர்த்த இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. இந்தநிலையில், உள்நாட்டு விமான போக்குவரத்துக்கான குறைந்தபட்ச, அதிகபட்ச கட்டணங்களுக்கான உச்சவரம்பை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. 9.83 சதவீதம் முதல் 12.82 சதவீதம்வரை கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது.

40 நிமிட பயணம்
அதன்படி, 40 நிமிடத்துக்கு உட்பட்ட பயண நேரத்துக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.2 ஆயிரத்து 600-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 900 ஆக உயர்த்தப்பட்டது. இது, 11.53 சதவீத உயர்வாகும். அதே பயண நேரத்துக்கான அதிகபட்ச கட்டணம் ரூ.8 ஆயிரத்து 800 ஆக உயர்த்தப்பட்டது. இது, 12.82 சதவீத உயர்வாகும்.இதுபோல், 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.3 ஆயிரத்து 700, அதிகபட்ச கட்டணம் ரூ.11 ஆயிரம்.ஒரு மணி முதல் 1½ மணி நேரம் வரையிலான பயணத்துக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆயிரத்து 500, அதிகபட்ச கட்டணம் ரூ.13 ஆயிரத்து 200.1½ மணி முதல் 2 மணிநேர பயணத்துக்கு ரூ.5 ஆயிரத்து 300 ஆகவும், 2 மணி முதல் 2½ மணி நேர பயணத்துக்கு ரூ.6 ஆயிரத்து 700 ஆகவும், 2½ மணி முதல் 3 மணி நேர பயணத்துக்கு ரூ.8 ஆயிரத்து 300 ஆகவும், 3 மணி முதல் 3½ மணி நேர பயணத்துக்கு ரூ.9 ஆயிரத்து 800 ஆகவும் குறைந்தபட்ச கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு விளக்கம்
மேற்கண்ட பயண நேரத்துக்கான அதிகபட்ச கட்டணம் முறையே 12.3 சதவீதம், 12.42 சதவீதம், 12.74 சதவீதம், 12.39 சதவீதம் என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் பாதுகாப்பு கட்டணம், விமான நிலைய மேம்பாட்டு கட்டணம், ஜி.எஸ்.டி. ஆகியவை சேர்க்கப்படவில்லை. டிக்கெட் பதிவு செய்யும்போது, இந்த கட்டணங்கள் சேர்க்கப்படும். அப்போது, கட்டணம் இன்னும் அதிகமாக இருக்கும்.

தற்போதைய கொரோனா நிலவரத்தை கருத்தில்கொண்டு கட்டண உயர்வு முடிவை எடுத்துள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

Next Story