சரியான யுக்திகளை கையாண்டு புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்: கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்

சரியான யுக்திகளை கையாண்டு புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
இணையவழி கருத்தரங்கம்
இந்திய தொழில் கூட்டமைப்பு புதுச்சேரி கிளை ஏற்பாடு செய்த 75-வது ஆண்டில் சுதந்திர இந்தியா புதுச்சேரி 2022 ஒரு சிறப்பு கண்ணோட்டம் என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கம் நேற்று நடந்தது. கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம். இந்தியாவை 2022-க்குள் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற சி.ஐ.ஐ. போன்ற நிறவனங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன.இதனால் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக வேகமாக முன்னேற முடியும். கொரோனா தொற்று வளர்ச்சி இலக்குகளை நோக்கி நம்முடைய பயணத்தை சிறிது மந்தப்படுத்தி இருக்கிறது. எதிர்காலத்தை புதிதாக திட்டமிடுவதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்து உள்ளதால் 2047-ஐ நோக்கி முன்னேறுவதற்கான பார்வையை நாம் வளர்த்து கொள்ள வேண்டும்.
வளர்ச்சி பாதை
புதுச்சேரியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல சரியான யுக்திகளை நாம் கையாள வேண்டும். புதுச்சேரியை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் இந்திய தொழில் கூட்டமைப்பின் புதுச்சேரி கிளையை நான் பாராட்டுகிறேன். கொரோனா 2-வது அலையை மிக கவனமாக எதிர்கொண்டோம். 3-வது அலை வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பிரதமர் நரேந்திரமோடி ஆத்ம நிர்பார் பாரத் தொலை நோக்கு திட்டத்திற்கேற்ப தன்னிறைவு பெற்ற, வளமான, வலுவான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க நாம் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டால் நம்மால் சாதிக்க முடியாதது ஒன்றுமில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story