சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - நிதியமைச்சகம் தகவல்


சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - நிதியமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 30 Sep 2021 8:53 PM GMT (Updated: 30 Sep 2021 8:53 PM GMT)

நடப்பு நிதியாண்டின் 3-ம் காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி, 

சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் காலாண்டு அடிப்படையில் வெளியிடப்படுகிறது. அந்தவகையில் நடப்பு நிதியாண்டின் 3-ம் காலாண்டுக்கான வட்டி விகிதங்களை மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் 2-வது காலாண்டின் வட்டி விகிதங்களில் இருந்து எந்த மாற்றமும் செய்யாமல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

 ‘2021-22-ம் நிதியாண்டின் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான 3-வது காலாண்டில் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது. அந்தவகையில் 2-வது காலாண்டின் (ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை) வட்டி விகிதங்களே தொடரும்’ என கூறப்பட்டு இருந்தது. 

இதன்மூலம் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய சேமிப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கான வட்டி விகிதங்கள் முறையே 7.1 சதவீதம் மற்றும் 6.8 சதவீதத்திலேயே தொடரும். வரவிருக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை முன்னிட்டே மத்திய அரசு வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யவில்லை என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். 

சிறுசேமிப்பு திட்டத்தில் அதிக பங்களிப்பு செய்யும் மாநிலங்களில் மேற்கு வங்காளத்துக்கு அடுத்ததாக 2-வது இடத்தில் உத்தரபிரதேசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story