சத்தீஷ்கார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குழு டெல்லியில் முகாம் - முதல்-மந்திரி மாற்றமா?


சத்தீஷ்கார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குழு டெல்லியில் முகாம் - முதல்-மந்திரி மாற்றமா?
x
தினத்தந்தி 30 Sep 2021 9:30 PM GMT (Updated: 30 Sep 2021 9:30 PM GMT)

சத்தீஷ்கார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் டெல்லி சென்று முகாமிட்டுள்ளனர்.

புதுடெல்லி, 

சத்தீஷ்காரில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்கு அவருக்கு எதிராக சுகாதார மந்திரி சிங் தியோ போர்க்கொடி தூக்கி உள்ளார். 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றபோது, முதல்-மந்திரி பதவிக்கு பூபேஷ் பாகலுக்கும், டி.எஸ்.சிங் தியோவுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது.

சுழற்சி அடிப்படையில் முதல்-மந்திரி பதவியை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம் என அப்போது கட்சி மேலிடம் கூறியதாக தெரிகிறது. இரண்டரை ஆண்டுகள் முடிந்து விட்டதால் முதல்-மந்திரி பதவி போட்டியில் சிங் தியோ இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல்-மந்திரிக்கு நெருக்கமான ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 15 பேர் டெல்லி சென்று முகாமிட்டுள்ளனர். அவர்கள் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் பி.எல்.புனியாவை சந்திக்க முகாமிட்டிருப்பதாகவும், ஆனால் அவரோ லக்னோவில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பஞ்சாப் மாநிலத்தைப்போன்று இங்கும் முதல்-மந்திரி மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் 15 எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான பிரிஹாஸ்பத் சிங், “முதல்-மந்திரியை மாற்றும் கேள்வியே எழவி்ல்லை. பூபேஷ்சிங் தன் முழு பதவிக்காலத்தையும் நிறைவு செய்வார்” என கூறினார்.

Next Story